கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டோருக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் குறித்த ஆய்வு

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குக் கூடுதல் அபாயம்

2 mins read
4a158fc4-4c61-47c1-816c-5bbe7c0631c4
கொவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குக் கிருமித்தொற்றிலிருந்து மீண்ட ஓராண்டு காலத்திற்குப் பின் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் கிருமித்தொற்றால் பாதிக்கப்படாதோருடன் ஒப்பிடுகையில் 56% அதிகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், கிருமியால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பின் இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படாதோருடன் ஒப்பிடுகையில் இக்குறிப்பிட்ட பிரிவினர், ஓராண்டுக்குப் பிறகு இதயச் செயலிழப்பு, பக்கவாதம், ரத்த உறைவு போன்ற இதயம் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்படும் அபாயம் 56% அதிகம்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பரிசோதனைகள், மருத்துவக் கோரிக்கைப் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளி, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் ஆகியவை கூட்டாக இந்த ஆய்வை மேற்கொண்டன.

ஆய்வின்படி கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்ட 912 நோயாளிகளிடம் சோர்வு, மூச்சுத் திணறல், ஞாபக மறதி, இதயச் சிக்கல்கள் போன்ற நீடித்த பின்விளைவுகள் காணப்பட்டன.

அத்துடன் கிருமித்தொற்றிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 311 பேருக்கு அவர்களின் இதயத் துடிப்பு பாதிக்கப்பட்டது.

‘டெல்டா’ கிருமித் திரிபு அதிகம் தொற்றிய காலகட்டத்தில் 2021ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சமூகத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளாகாத 1.7 மில்லியன் பேருடன் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட இந்த 100,000 பேர் கொண்ட பிரிவினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதிக எண்ணிக்கையில் கொவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல்லின தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கொவிட்-19 கிருமித்தொற்றின் நீடித்த அபாயத்தை ஆராய்ந்துள்ள முதல் ஆய்வு இது.

தற்போது இன்னொரு கொவிட்-19 கிருமித்தொற்று அலையை சிங்கப்பூர் எதிர்நோக்கும் நிலையில் கடந்த இரு வாரங்களாக தினமும் 2,000 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்