சிங்கப்பூரில் குப்பை போடுவது தொடர்பில் மேலும் அதிகமானோர் கடந்த ஆண்டு பிடிபட்டனர். பொது இடங்களில் குப்பை போட்டதன் தொடர்பில் 20,000க்கும் மேற்பட்ட எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமையன்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இவ்வாறு 2021ஆம் ஆண்டில் குப்பை போட்டதற்காக கிட்டத்தட்ட 14,000 எச்சரிக்கைக் கடிதங்களும் 2020ல் சுமார் 17,400 கடிதங்களும் வழங்கப்பட்டன.
தேக்கா சென்டர், பீப்பள்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களில் அதிகமான குப்பைகள் சேர்வதை அடுத்து வாரியம் அதன் அமலாக்கப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதிகாரிகள் அவ்விடங்களில் நிறுத்தப்பட்டதுடன் ஏப்ரல் மாதம் முதல் தொலைக் கண்காணிப்பு கேமராக்களையும் வாரியம் பயன்படுத்தியது.
உயரமான இடத்திலிருந்து குப்பை போடுவோருக்கு எதிராக எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு குறைந்தது. 1,100 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2021ல் இந்த எண்ணிக்கை 1,500 ஆகவும் 2020ல் 2,000 ஆகவும் இருந்தது. அமலாக்க நடவடிக்கைகளில் நீதிமன்றம் விதிக்கும் அபராதம், திருத்த வேலை உத்தரவு அல்லது இரண்டுமே அடங்கும்.
“குடியிருப்பு வீடுகளிலிருந்து குப்பையைத் தூக்கி எறிவது கடுமையான ஒரு குற்றம். பொதுமக்களுக்கு அதனால் ஆபத்து நேர்வதுடன் சுற்றுச்சூழல் அசுத்தமாகும். அத்துடன் பொதுச் சுகாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகும்,” என்றது வாரியம்.
தேசிய சுற்றுப்புற வாரியம் 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உயரமான இடத்திலிருந்து குப்பையை வீசுவது தொடர்பில் ஆண்டுக்குச் சராசரியாக 31,200 புகார்களை விசாரித்துள்ளது. அதே காலகட்டத்தில் வாரியம் சராசரியாக 2,600 கேமராக்களை ஒவ்வோர் ஆண்டிலும் பயன்படுத்தி உள்ளது.
பொது இடங்களில் முதல் முறை இவ்வாறு குப்பையை வீசுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படலாம். உயரமான இடங்களிலிருந்து குப்பையை வீசுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
சாப்பிட்ட உணவுத்தட்டை அப்புறப்படுத்துதல்
உணவங்காடி நிலையங்கள், காப்பி கடைகள், உணவு நிலையங்கள் ஆகியவற்றில் உணவுண்ட பிறகு தட்டுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றதன் தொடர்பில் வாரியம் 900 எச்சரிக்கைக் குறிப்புகளை விதித்துள்ளது. ஒருவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு சாப்பிட்ட பிறகு தட்டுகளை அப்புறப்படுத்தும் விகிதம் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 65 விழுக்காடாக இருந்தது. தற்போது 92 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றது வாரியம்.
துப்புரவுத் துறைக்கு மேம்பாடுகள்
துப்புரவுத் துறையில் உள்ள வர்த்தகங்களிடையே ஆற்றலை ஊக்குவிக்கவும் பொதுச் சுகாதாரத் தரங்களை உயர்த்தவும் அத்துறைக்கான உரிமம் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மேம்படுத்தப்படவுள்ளது.
மாற்றி அமைக்கப்படும் கட்டமைப்புத் திட்டத்தில் துப்புரவு நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்ட மூவகை உரிமங்கள் வழங்கப்படும். அவை ஈராண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி 1,460 உரிமம் பெற்ற துப்புரவு நிறுவனங்களும் 54,400 துப்புரவுப் பணியாளர்களும் சிங்கப்பூரில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.