சிங்கப்பூரில் $2.8 பில்லியன் சொத்துகள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய கள்ளப்பண மோசடி விவகாரம் தலைதூக்கி இருக்கிறது.
இந்த நிலையில், வங்கிகள் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாக்குகின்றன. இப்போது வங்கிகள் வாடிக்கையாளர்களை அலசி ஆராய வழக்கத்திற்கு மாறாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.
சில விவகாரங்களைப் பொறுத்தவரை கணக்குகளை முடிக்கவும் அவை அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக தெரியவந்து இருக்கிறது.
ஓசிபிசி, சிட்டிக் குழுமம், யுஓபி போன்ற வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் செலுத்தப்படும் பணம் எப்படி வந்தது என்பதைச் சரிபார்க்க மேலும் பல ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்பதாக இரண்டு தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு மட்டுமன்றி, அதிக பணம் வைத்து இருப்பவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறக்கும்போது காத்திருப்பதற்கான நேரமும் மூன்று மாதம் வரை அதிகமாகி இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாடிக்கையாளர்களின் அடையாளங்களை நிதி நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும். அவர்களுக்குப் பணம் எப்படி வந்தது என்பதை கண்டறிய வேண்டும். பணம் வந்ததற்கான வழிகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.
பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த நிபந்தனைகள் எல்லாம் புதியவை அல்ல என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டினர் 10 பேரைக் கைது செய்து அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. அந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் சுமார் $2.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.
அதையடுத்து வங்கிகள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பலப்படுத்தி இருக்கின்றன.
சிங்கப்பூரில் அரசியல் நிலைப்பாடு, குறைவான வரி விகிதம், நிதி அமைப்புகளைத் தோற்றுவிக்க அனுகூலமான கொள்கைகள் ஆகியவை இருக்கின்றன.
இதன் காரணமாக சீனா, ஹாங்காங்கில் இருந்தும் இதர வேறு இடங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு அதிக பணம் வருகிறது.
சிங்கப்பூர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மொத்த நிதி மதிப்பு 2021ல் 16% கூடி $5.4 டிரில்லியனாகியது என்பது ஆகப் புதிய மத்திய வங்கி புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. இந்த அதிகரிப்பு உலகளவில் 12% ஆக (US$112 டிரில்லியன்) இருந்தது.
இத்தகைய ஒரு நேரத்தில் அந்த மாபெரும் கள்ளப்பண மோசடி அம்பலமாகி இருக்கிறது.

