எம். ரவியை கண்காணிக்க தவறிய வழக்கறிஞருக்கு ஆறு மாதம் தொழிலில் ஈடுபட தடை

2 mins read
54f37c76-92db-42ea-a020-1eeef07f541a
எம். ரவி எந்த வழக்குகளில் ஈடுபடுகிறார் என்பதைக் கூட வழக்கறிஞர் செங் கவனிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம். ரவியை தனது மேற்பார்வையின்கீழ் வைத்துக் கொள்வதாக வழக்கறிஞர் செங் கிம் குவான் உறுதியளித்திருந்தார். ஆனால் அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக திரு செங்குக்கு ஆறு மாத காலம் வழக்கறிஞர் பணியில் ஈடுபட மூவர் அடங்கிய நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவு 2024ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்.

எம்.ரவி இருவித மனநிலை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை கே.கே. செங் சட்ட நிறுவனத்தில் தமது மேற்பார்வையின்கீழ் கண்காணிப்பதாக உச்ச நீதிமன்றத்துக்கும் வழக்கறிஞர் சங்கத்துக்கும் திரு செங் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார்.

இதனால் 2021-2022 காலத்தில் சில நிபந்தனைகளின்கீழ் வழக்கறிஞராக பணியாற்ற எம்.ரவிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் எம்.ரவியை தன்னிச்சையாக செயல்பட திரு செங் அனுமதியளித்துள்ளார்.

திரு செங்கின் சட்ட அலுவலகம் பீப்பள்ஸ் பார்க் சென்டரில் செயல்படுகிறது. எம்.ரவி தனியாக ஹை ஸ்திரீட்டில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அலுவலகத்தில் செயல்பட்டார்.

மேலும் எம்.ரவி, சில வழக்கு விசாரணைகளில் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சமூக ஊடகங்களில் சச்சரவுக்குரிய காணொளிகளை அவர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமைச் சட்ட அலுவலகம் திரு செங்குக்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து தம்முடைய அனுமதியைப் பெறாமல் வழக்கு விசாரணையில் முன்னிலையாகக் கூடாது என்று எம்.ரவிக்கு திரு செங் மேலும் நிபந்தனைகளை விதித்தார்.

எம். ரவி எந்த நிபந்தனையும் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டிலிருந்து எம்.ரவியை தனது மேற்பார்வையில் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று திரு செங் தெரிவித்திருந்தார்.

ஆனால் திரு செங் தனது கடமையிலிருந்து மீறியதாக வழக்கறிஞர் சங்கத்திடம் தலைமைச் சட்ட அலுவலகம் 2022 ஜனவரி 6ஆம் தேதி புகார் அளித்தது. இதனை விசாரித்த இரு உறுப்பினர்களைக் கொண்ட ஒழுங்கு நடுவர் குழு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு அனுப்பியது.

திங்கட்கிழமையன்று மூவர் அமர்வு நீதிமன்றம் செங்குக்கு ஆறு மாத காலம் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட தடை விதித்தது.

குறிப்புச் சொற்கள்