குறைபாடுகளைக் கடந்து பிறழா மனவுறுதி

2 mins read
297736eb-feb1-462d-b243-cba36ad9bf42
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ஒருவருடன் உரையாடும் சிறார்களுடன் (இடமிருந்து மூன்றாமவர்) குமார மனோஹர ஹர்திக், 14. - படம்: சாவ்பாவ்

பெருமூளைவாதம், கற்றல் குறைபாடு, மங்கலான பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் வாழ்க்கையில் துணிச்சலுடன் நடைபோடுகிறார், குமார மனோஹர ஹர்திக், 14.

தாமதமான பேச்சாலும் முகபாவத்தாலும் தென்படும் அளவுக்கு இவரது மனவுறுதி பிறருக்கு எளிதில் தெரிவதில்லை. ஆனாலும், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னைத் திறனாளராக்கிக் கொள்ளும் வேட்கை, அடுத்த ஆண்டு தொடக்கநிலை இறுதித் தேர்வை எழுதவிருக்கும் ஹர்திக்கிற்கு உள்ளது.

பிறர் துணையின்றி பேருந்தில் பள்ளிக்குச் சென்று திரும்புவது தொடக்கத்தில் ஹர்திக்கிற்குச் சவாலாக இருந்தது. ஆனால், இப்போது அவரால் பல்வேறு இடங்களுக்குத் தனியாகச் செல்ல முடிகிறது.

உடற்குறைகள் இருந்தபோதும் மனதளவில் துவண்டுவிடாமல் செயல்படுகிறார் இவர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதுடன் ஏற்கும் பொறுப்புகளைச் செம்மையாக நிறைவேற்றுவதால் பள்ளியில் ஆசிரியர்கள் இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

பந்து விளையாட்டு, நீச்சல், சைக்கிளோட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு மன உரத்தை வளர்த்து வருகிறார். நீச்சல் கடினமாக இருந்தபோதும் நாளடைவில் அதையும் பழகிக்கொண்டார்.

பிறருடன் அதிகம் பழகுவதன்மூலம் அவர்களைப் பற்றிய நல்ல புரிதல் ஏற்படுவதாகவும் புதியவற்றைத் தெரிந்துகொள்வதாகவும் ஹர்திக் கூறினார். தன்னை அன்போடு ஆதரிக்கும் ஆசிரியர்கள்மீது இவருக்கு பெருமதிப்பு உண்டு.

சிங்கப்பூர் பெருமூளை பாதிப்புடையோர் நலக் கூட்டணி, உடற்குறையுள்ளோர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தோருக்காக செப்டம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் ஹர்திக் பங்கேற்றார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் பயிற்சிகளை நேரில் காணும் வாய்ப்பு பெற்ற 400 பங்கேற்பாளர்களில் இவரும் ஒருவர். ஹர்திக்கும் மற்ற சிறார்களும் விமானிகளிடமும் விமானப்பணியாளர்களிடமும் கேள்விகள் கேட்டுக் கற்றுக்கொண்டனர்.

இயன்றவரை உலகைச் சுற்றிப்பார்த்து அதன் எழிலை ரசிக்க விரும்பும் ஹர்திக், வருங்காலத்தில் காணொளித் தொகுப்பாளராகப் பணிபுரிய ஆசைப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்