தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாரி ஏறியதில் மோசமாகக் காயமுற்ற இளையர்; மருத்துவக் கட்டணத்தைச் சமாளிக்க உதவி கோரும் குடும்பத்தார்

2 mins read
e930e690-8303-416d-90fa-fc97c041a1d6
தம் சகோதரர் ஜோகூருக்குத் திரும்பி சிகிச்சையைத் தொடர விரும்புவதாக நூர் அய்னி (இடக்கோடி) தெரிவித்தார். - படம்: நூர் அய்னி

சிங்கப்பூரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இளம் மலேசிய சமையல் வல்லுநர் முகம்மது மாஹ்டி மோசமாகக் காயமுற்றதைத் தொடர்ந்து, மருத்துவமனைச் செலவைச் சமாளிக்க அவருடைய குடும்பத்தார் நிதி திரட்டி வருகின்றனர்.

செப்டம்பர் 8ஆம் தேதி காலை 9 மணியளவில் சிலேத்தார் விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அன்றைய தினம் சக ஊழியருக்குப் பின்னால் அமர்ந்து திரு மாஹ்டி மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தார். ஜோகூரிலிருந்து சிங்கப்பூர் வந்த அவர்கள், சிலிகி சாலையில் தாங்கள் பணிபுரியும் கொரிய உணவகம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை ஓட்டிய திரு மாஹ்டியின் சக ஊழியர், வலது சாலைத் தடத்திற்கு மாறவிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தார். இதில் இருவரும் கீழே விழ நேரிட்டது.

அவ்வழியாகச் சென்ற லாரி ஒன்று 23 வயது திரு மாஹ்டி மீது ஏறியதில் முதுகெலும்பிலும் இடது கையிலும் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கூ டெக் புவாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முதுகெலும்பிலும் கையிலும் உலோகத் தட்டுகளைப் பொருத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு மாஹ்டியின் மூத்த சகோதரி நூர் அய்னி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தம் சகோதரருக்கு மூன்று வாரங்களுக்குக் கடும் வலி நிவாரணியான ‘மோர்ஃபின்’ கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

படுத்த படுக்கையாக உள்ள திரு மாஹ்டியால் இப்போது தலையை மட்டும் அசைக்க முடிகிறது.

“இப்போது அவருக்கு வலி இல்லை. ஆனால், எழுந்து நடக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர் கூறினார்,” என்றார் அய்னி, 30.

திரு மாஹ்டியும் அந்த 31 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் பணிபுரியும் அதே கொரிய உணவகத்தில்தான் அய்னியும் வேலை செய்கிறார். அந்த உணவகத்தில் சமையல் வல்லுநராக வேலை செய்யும் அந்த மோட்டார்சைக்கிளோட்டிக்கு நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டதுடன் விலா எலும்பு முறிவும் ஏற்பட்டது.

விபத்து நிகழ்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் திரு மாஹ்டி அந்த உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். முதல் சில தினங்களுக்கு அவர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினார். ஆனால், அன்றைய தினம் மட்டும் அவரும் அவருடைய சக ஊழியரும் மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூருக்கு வர முடிவெடுத்ததாக அய்னி குறிப்பிட்டார்.

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்றார் அவர்.

தம் சகோதரரின் காப்புறுதிக்கு $60,000க்கு கோரிக்கை வரம்பு இருப்பதாக அய்னி சொன்னார். எஞ்சிய தொகையைத் தவணை முறையில் இப்போதைக்கு ஈடுசெய்ய அவர்களுடைய முதலாளி உதவுகிறார்.

ஆனால், முதலாளிக்கு அதிக நிதிச்சுமை கொடுக்காமல் இருக்க, தம் சகோதரரின் மருத்துவச் செலவைச் சமாளிக்க நன்கொடை வழங்கி உதவுவாறு பொதுமக்களை அய்னி கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்