சமையலறைப் பொருள்களை விற்க நினைத்தவருக்கு $72,000 இழப்பு

சமையலறைப் பொருள்களை விற்க நினைத்தவருக்கு $72,000 இழப்பு

1 mins read
9cd65c65-6616-4168-84a9-c2b212fb66d5
ஃபேஸ்புக்கில் விளம்பரம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மோசடி. - படம்: திருவாட்டி அப்துல்

பயன்படுத்தப்பட்ட சமையலறைப் பொருள்களை இணையம்வழி விற்பதற்காக மூன்றாம் தரப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்த ஓர் 68 வயது மாது 72,500 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.

அவரின் பிஓஎஸ்பி வங்கிக் கணக்கிலிருந்து 15 நிமிடங்களில் அத்தொகை பறிபோனது. செயலி என்று நினைத்து அவர் தீங்குநிரலைப் பதிவிறக்கம் செய்துவிட்டார். அதன் மூலம் மோசடிக்காரர்கள் அவரின் ஆண்ட்ராய்ட் கைப்பேசியை இயக்கி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துவிட்டனர்.

பாதிக்கப்பட்ட மாது திருவாட்டி அப்துல் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகப் பணிபுரியும் அவர் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் மறுபயனீடு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்டார்.

பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் 30லிருந்து 100 வெள்ளி வரை வழங்கப்படும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

திருவாட்டி அப்துலிடமிருந்து அப்பொருள்களை வாங்குவதுபோல் நடித்த ஒருவர், பரிவர்த்தனை இடம்பெறும்போது மாதை மூன்றாம் தரப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியிருக்கிறார். அவ்வாறுதான் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது.

இது குறித்து புகார் கொடுக்கப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது. விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை சொன்னது.

குறிப்புச் சொற்கள்