இணையத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை வாங்க முற்பட்ட 21 பேர் மோசடி வலையில் சிக்கி குறைந்தது 210,000 வெள்ளியை இழந்துள்ளனர்.
உடை, மின்பொருள்கள், அறைகலன் போன்ற பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்பதுபோல மோசடிக்காரர்கள் ஃபேஸ்புக்கில் போலி விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றியிருக்கின்றனர் என்று செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தது.
அந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள், மோசடிக்காரர்களுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட விலைக்கு பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டனர்.
அப்போது ஆண்ட்ராய்ட் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் செயலியை நிறுவியிருக்கின்றனர். அந்தச் செயலி ரகசியமாகச் செயல்படக் கூடியது. கைப்பேசியில் அது ஊடுருவி வங்கி விவரங்களை தொலைவிலிருக்கும் மோசடிக்காரர்களுக்கு அனுப்பிவைக்கக் கூடியது.
அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் மாயமாகிவிடும். வங்கிக் கணக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலே பரிவர்த்தனைகளும் நடந்திருக்கும்.
அந்த வகையில் ஏறக்குறைய 21 பேர் 210,000 வெள்ளி வரை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இணையத்தில் குறிப்பாக ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் விளம்பரங்களில் கவனமாக இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் ‘கூகல் ஸ்டோர்’ உள்ளிட்ட அதிகாரபூர்வ தளங்களிலிருந்து மட்டும் செயலிகளை இறக்குமதி செய்யுமாறு அது கேட்டுக் கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதாவது இருந்தால் உடனே வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

