தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மெடிஷீல்ட் லைஃப்’ காப்புறுதி மூலம் பெரும்பணம் வசூல்

2 mins read
79e670e1-e5e1-498f-bc74-823b6af22199
ஏறக்குறைய 29 சம்பவங்கள் முறையற்ற வகையில் கோரப்பட்டுள்ளன. மேலும் எழுபது சம்பவங்கள் விசாரிக்கப்படுகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘மெடிஷீல்ட் லைஃப்’ காப்புறுதி திட்டத்தின் மூலம் பெரும் பணம் வசூலிக்கப்பட்ட பல சம்பவங்களை சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

பொருத்தமற்ற சிகிச்சை, தேவையற்ற ஒப்பனை அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு மெடிஷீல்ட் லைஃப் மூலம் பெரும் தொகை கோரப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் 95,000 வெள்ளி கோரப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது

சிங்கப்பூரர்கள் ‘பி2’, ‘சி’ வார்டுகளின் பெரிய அளவிலான கட்டணத்தை செலுத்த உதவும் ‘மெடிஷீல்ட் லைஃப்’ காப்புறுதி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘மெடிஷீல்ட் லைஃப்’ கோரிக்கை தொகைகளைக் கவனிக்கும் நிர்வாக அலுவலகம், அக்டோபர் 2022லிருந்து பத்து மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட முறையற்ற வகையில் கோரப்பட்ட 29 சம்பவங்களைக் கண்டுபிடித்துள்ளது.

மேலும் எழுபதுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இதனால் சில மருத்துவர்கள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னைய 29 சம்பவங்களில் ஏறக்குறைய 400,000 வெள்ளி வரை முறையற்ற வகையில் கோரப்பட்டது.

இதில் 95,000 வெள்ளி சம்பவமும் ஒன்று. இதில் வயிறு மற்றும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கட்டியை அகற்றுவதற்காக அதிக தொகை கோரப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.

கோரிக்கைகளை பரிசீலிக்கும் குழு, அறுவை சிகிச்சை மருத்துவரீதியில் பொருத்தமாக இருந்தாலும் அதற்கான தொகை பலதரப்பட்ட குறியீடுகள் மூலம் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. இது முறையற்றது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கான கட்டணமும் கூடுகிறது. இதனால் நோயாளிகள் தங்களுடைய கையிலிருந்து கூடுதலாக பணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்காக நோயாளிகள் மெடிசேவ் பணத்தை எடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில் 5,600 வெள்ளிக்கு மேல் தவறான வகையில் கோரப்பட்டுள்ளது. இதில் கண்புரை உள்ள நோயாளிக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் கிராஸ்-லிங்க் எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது, நோயாளிக்கு தேவையில்லாத மருத்துவ அபாயங்களை ஏற்படுத்தும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதல் 29 சம்பவங்களில் மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எதற்கு, எப்படி கோர வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமலாக்க நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன.

புதிய தவறான, முறையற்ற கோரல்கள் அல்லது மறுபடியும் இதே தவறைச் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்