உடல், மன நலவாழ்வுத் தோட்டங்கள் உதயம்

உடல், மன நலவாழ்வுத் தோட்டங்கள் உதயம்

2 mins read
66e95fbc-99d5-4a67-983d-717d7a9228ef
செம்பவாங் பூங்காவில் அமைந்துள்ள தோட்டம், பலதரப்பட்ட மக்களின் வெவ்வேறான தேவைகளை நிறைவேற்றி உதவும் வகையில் உடல், மன நலவாழ்வு வசதிகளைக் கொண்டுள்ளது. - படம்: எஸ்டி

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் வசிப்போர், பசுமைச் சூழலில் தங்களுக்கே உரிய உடல், மன நலவாழ்வு வசதிகளை இப்போது அனுபவிக்கலாம்.

இதற்கு வசதியாக ஈசூன் குட்டைப் பூங்காவிலும் செம்பவாங் பூங்காவிலும் புதன்கிழமை இரண்டு நலவாழ்வுப் பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொன்றும் மூத்தோர், வெளி நோயாளிகள், சிறப்பு உதவிகள் தேவைப்படக்கூடிய சிறுவர்கள் போன்ற பலவகைப்பட்டோரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கே உரிய சிறப்பு அம்சங்களுடன் இருக்கிறது.

தெம்பனிசில் உள்ள சன் பிளாசா பூங்காவில் வேறு ஒரு புதிய தோட்டமும் திறக்கப்பட்டு உள்ளது. அதையும் சேர்த்து சிங்கப்பூரில் நலவாழ்வுத் தோட்டங்களின் எண்ணிக்கை 13 ஆகி இருக்கிறது.

ஈசூன் குட்டைத் தோட்டத்தில் அமைந்துள்ள 1,900 சதுர மீட்டர் பரப்புள்ள தோட்டம், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குப் பக்கத்தில் உள்ளது.

சக்கரநாற்காலியில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யத்தக்க பாலம், உடல், மன நல இருக்கைகள், மூன்று தலைமுறை உடற்பயிற்சி முகப்பு போன்ற வசதிகள் அங்கு இருக்கின்றன.

வருகையாளர்களுக்கும் வெளி நோயாளிகளுக்கும் பொருத்தமான உடல், மனநலத் தோட்டக்கலை, மறுவாழ்வு நடவடிக்கைகள் அங்கு இடம்பெறும்.

தேசிய பூங்கா வாரியம் ,இந்த மருத்துவமனையைக் கலந்து ஆலோசித்து தோட்டத்தை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பவாங் தோட்டத்தில் உள்ள நலவாழ்வுத் தோட்டம் அளவில் பெரியது. அது 2,200 சதுர மீட்டர் பரப்புள்ளது.

சிங்கப்பூரிலேயே இத்தகைய ஆகப்பெரிய தோட்டம் ஜூரோங் ஏரித் தோட்டங்களில் இருக்கிறது. அது 3,100 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது.

அதை அடுத்து இத்தகைய தோட்டங்களில் இரண்டாவது ஆகப்பெரிய தோட்டமாக செம்பவாங் நலவாழ்வுத் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

முன் கணிப்பு வகுப்பறை, பல வகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி சாதனங்கள், எல்லாருக்கும் உரிய வெளிப்புற உடலுறுதி முகப்பு முதலானவை இங்குள்ள வசதிகளில் அடங்கும்.

நாட்டின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள இந்த உடல், மன நலவாழ்வுத் தோட்டங்கள், டோட்டோ கழகம் அளித்த தொகையைக் கொண்டு உருவாகி உள்ளன.

தெம்பனிசில் உள்ள சன் பிளாசா பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள தோட்டம் 1,700 சதுர மீட்டர் பரப்புள்ளது. அதில் சிறிய நீரோடை ஒன்றும் ஓடுகிறது.

பன்மய உயிரினங்களைக் கவரக்கூடிய, நறுமணம் வீசக்கூடிய, அடர்த்தியான, பன்மய தாவரங்களுடன் கூடிய வளைந்து வளைந்து செல்லக்கூடிய பாதைகளால் இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் அங்குள்ளன.

சிங்கப்பூரில் இத்தகைய தோட்டம் 2015ல் ஹார்ட்பார்க்கில் முதன்முறையாக அமைக்கப்பட்டது. அது 2016ல் திறக்கப்பட்டது.

அந்தத் தோட்டத்தை மக்கள் அதிகம் விரும்பி நாடினார்கள். ஆகையால் வெவ்வேறான அம்சங்களுடன் கூடிய இத்தகைய உடல், மனநலத் தோட்டங்களை வாரியம் அமைக்கத் தொடங்கியது.

அவை சிங்கப்பூரில் வசிக்கும் வெவ்வேறான சமூகத்தினரின் உடல், மன நலவாழ்வுக்கு உதவுகின்றன. பொழுதுபோக்குத் தேவைகள் நிறைவேறவும் அவை உறுதுணையாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்