தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கச் சந்தையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் கால்பதிக்க உதவும் உந்துதளம்

3 mins read
00d797ae-e30b-4846-9e29-7eb3e5b02b2b
சிங்கப்பூர் நிறுவனங்கள், அமெரிக்கச் சந்தையில் வெற்றிகரமான முறையில் செயல்பட ஏதுவாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் புதிய உலகப் புத்தாக்க கூட்டணிக் கட்டமைப்பைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூர் நிறுவனங்கள், அமெரிக்கச் சந்தையில் வெற்றிகரமான முறையில் காலூன்ற ஏதுவாக அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு புதிய கட்டமைப்பைச் செவ்வாய்க்கிழமை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார்

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் புதிய உலகப் புத்தாக்கக் கூட்டணித் தளம் என்ற அந்தத் தளம் சிங்கப்பூரின் புதிய, நவீன நிறுவனங்களின் தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

அதோடு மட்டுமன்றி, உலகம் நிலையில்லாத ஒரு சூழலில் அடி எடுத்து வைக்கும் இப்போதைய காலகட்டத்தில் அது சிங்கப்பூருக்கு உயிர்நாடியான ஒன்று என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் அந்தக் கட்டமைப்பைத் தொடங்கிவைத்து திரு வோங் பேசினார்.

சிங்கப்பூரின் சந்தை மிகவும் சிறியது. 5.9 மில்லியன் மக்களைத்தான் கொண்டது. ஆகையால், சிங்கப்பூரின் ஒரு புதிய நிறுவனம் ஓரளவுக்குத்தான் உள்ளூரில் விரிவடைய முடியும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

இதனால் சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைய வேண்டிய தேவை இருக்கிறது என்றார் அவர்.

இந்தச் சூழலில் அமெரிக்காவைவிட சிறந்த வேறிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்றார் துணைப் பிரதமர்.

அமெரிக்காவின் பொருளியல் மிகப் பெரியது. ஆற்றல்கள் அங்கு ஏராளம். முதலீடு புழக்கமும் அதிகம் என்பதை அவர் சுட்டினார்.

நியூயார்க் நகரில் 25,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கூட்டுத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட US$147 பில்லியன் (S$200 பில்லியன்) என்பதை திரு வோங் சுட்டிக்காட்டினார்.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நியூயார்க் சிட்டியில் தொடங்கி இருக்கும் புதிய கட்டமைப்பு, அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இருக்கும் இரண்டாவது தளமாகும்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் 2019ல் ஒரு கட்டமைப்பு தொடங்கப்பட்டது.

லண்டன், பெர்லின், அபுதாபி, மும்பை, ஷங்காய் போன்ற நகர்களில் இதர 17 கட்டமைப்புகள் செயல்படுகின்றன.

நியூயார்க்கில் தொடங்கப்பட்டு இருக்கும் கட்டமைப்பு, நியூயார்க் சிட்டிக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தும்.

இரண்டு நாடுகளின் நிறுவனங்களை மேலும் அணுக்கமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க் சிட்டியில் சிங்கப்பூர் ஏற்கெனவே அணுக்கத் தொடர்புகளைக் கொண்டிருப்பதை திரு வோங் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வசதிகள் உறுதியான அடிப்படையாகத் திகழ்கின்றன. அதன் உதவியுடன் சிங்கப்பூர்-நியூயார்க் தொடர்புகளை ஆழப்படுத்தி பொருளியல் வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தலாம்.

இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூர் தொடர்ந்து செழிப்படைய உயிர்நாடியானவை என்றார் அவர்.

உலகமய யுகம் முடிந்துவிட்டது. இப்போது ஆதிக்கப் போட்டாபோட்டி அதிகமாகி இருக்கிறது. நிச்சயமில்லாத உலகம் உருவாகப்போகிறது என்று திரு வோங் எச்சரித்தார்.

இத்தகைய சூழலில் சில நாடுகள் தங்கள் சொந்த எல்லைக்குள்ளேயே செயல்பட விரும்பும். ஆனால், சிங்கப்பூரால் அது முடியாது. இதன் காரணமாக சிங்கப்பூர் உலகத்தோடு கூடிய தொடர்புகளை இன்னும் சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இரண்டு மடங்காக்க வேண்டும் என்றார் திரு வோங்.

திரு வோங் அமெரிக்காவுக்கு அக்டோபர் 5 முதல் 15 வரை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

சிங்கப்பூரின் புதிய நவீன நிறுவனங்கள் தோற்றமும் புத்தாக்கச் சூழலும் ஏற்கெனவே பலன் தர தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்