சிங்கப்பூர் சிறிய, நடுத்தர சில்லறை விற்பனை நிறுவனங்களும் தொழில்முனைவர்களும் கடல்கடந்து இணையம் வழியாக தங்கள் பொருள்களை விற்பதற்குத் துணைபுரியும் வகையில் புதிய புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தாகியுள்ளது.
‘அமேசான்’ உலக விற்பனை சிங்கப்பூர்ப் பிரிவும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சிங்கப்பூர் சில்லறை விற்பனை ஆய்வுக் கழகமும் (NYP-SIRS) அக்டோபர் 11 புதன்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
‘மரினா பே சேண்ட்ஸ்’ எக்ஸ்போ மண்டபத்தில் அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்றுவரும் தொழில்நுட்ப வாரத்தில், ‘அமேசான்’ உலக விற்பனை மாநாட்டின் தொடக்க அங்கமாக இது நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் பங்கேற்றார்.
இந்த ஒப்பந்தம்வழி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏறக்குறைய 800 நுண், சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்கள், தொழில்முனைவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வணிகம் புரிய விரும்புவோர் பயனடைவர்.
குறிப்பாக, தென்னமெரிக்கச் சந்தையில் நுழைவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஒப்பந்தத்தின் முதல் முயற்சியாக ‘அமேசான்’வழி அனைத்துலக அளவில் விற்கும் உத்திகளைப் பயிற்றுவிக்கும் இருநாள் பயிலரங்குகள் தொடங்கியுள்ளன. இவை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏறக்குறைய இரு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறும். பயிலரங்கிற்கான கட்டணம் செலுத்த ‘ஸ்கில்ஸ்ஃப்யூச்சர்’ பயிற்சி உதவி நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இம்மாதம் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அடுத்த பயிலரங்கிற்கு https://for.edu.sg/amazonglobalsellingsummit2023 எனும் இணையப் பக்கம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், ஆண்டிற்கு இருமுறை, சீனாவிற்கு மேற்கொள்ளும் ஐந்து நாள் கல்விப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்படும். அவற்றின் ஒரு பகுதியாக, சீனாவின் மாபெரும் இறக்குமதி, ஏற்றுமதி (கேண்டன்) கண்காட்சியைப் பார்வையிடலாம். ‘அமேசான்ஒன்’ (AmazonOne) பயிற்சியிடத்தில் பயிலரங்குகளிலும் பங்குபெற முடியும்.
அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் இப்பயணங்கள் இடம்பெறும்.
இவை தவிர்த்து, வணிகங்களை ஒன்றோடொன்று அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள், சேவை வழங்குவோருடன் சந்திப்புகள், வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
வணிகங்கள் தம் இணையவழி விற்பனை ஆற்றல்களை மேம்படுத்தினால், இணையவழி வணிக, ஏற்றுமதி வருவாய் 2022ல் S$1.7 பில்லியனிலிருந்து 2027க்குள் S$3.9 பில்லியனாக அதிகரிக்கும் என அண்மைய ஆய்வு கணித்துள்ளது.
‘கொவிட்-19’ தொற்றுக் காலத்தில் சூடுபிடித்த இணையவழி வணிகத்தில் மேலும் பல சிங்கப்பூர் நிறுவனங்கள் நுழைய இது உகந்த நேரம்.
“சிங்கப்பூர் வணிகங்கள் நம்பத்தக்கவை, தரமிக்கவை என்பது உலகெங்கிலும் தெரிந்த ஒன்று.”
“அறிமுகமாகியுள்ள திட்டங்களைப் பயன்படுத்தி உலகச் சந்தைக்குள் நுழைய மேலும் பல வணிகங்கள் முன்வரவேண்டும்,” என்றார் அமைச்சர் லோ.
அமேசான் தளம் மூலம் அமெரிக்காவிற்கும் பின்பு ஐரோப்பாவிற்கும் விரிவடைந்துள்ள உள்ளூர் வணிகம் கியாபேபீஸின் வளர்ச்சியையும் அவர் பாராட்டினார். 2021ல் கியாபேபீஸின் வருவாய் US$30 மில்லியனையும் தாண்டியது. மேலும், அமேசான் பிரைம்டே 2020ஆம் ஆண்டில் இரு நாள்களில் US$500,000 ஈட்டியது.
வணிகங்களுக்கு அரசாங்கத்தின் மற்ற திட்டங்கள்
தற்போது அரசாங்கம் சந்தை ஆயத்தநிலை உதவி மானியம் (MRA), உலகமயமாக்கத்திற்கான இரட்டை வரிக் கழிவு (DTDI), என்டர்பிரைஸ் சிங்கப்பூர் சாலைக் காட்சிகள், வெளிநாட்டு வணிகப் பயணங்கள், வணிகக் கண்காட்சிகள் போன்றவற்றை வணிகங்களுக்கு வழங்குகிறது.
அண்மையில் என்டர்பிரைஸ் சிங்கப்பூர், நியூயார்க் சில்லறை விற்பனைக் காட்சிக்கு பத்து உள்ளூர் வணிகங்களையும் கொண்டுசென்றது.
இம்முயற்சிகளோடு இணைந்து, வணிகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் எனச் சொல்லப்படுகிறது
தென்கிழக்காசியாவின் புதிய விற்பனையாளர்களுக்குக் கட்டணத் தள்ளுபடியையும் ‘அமேசான்’ இந்த மாநாட்டில் அறிவித்தது.
அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் நடைபெறும் சிங்கப்பூர் தொழில்நுட்ப வாரத்தில் மொத்தம் ஏழு மாநாடுகள் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு www.singaporetechnologyweek.com/ இலவசமாகப் பதிவுசெய்யலாம்.
குறிப்பாக, இணையவழி வணிகம் பற்றிய மாநாட்டிற்குப் பதிவுசெய்ய: https://www.gevme.com/ECEA23

