ஜோகூர் சுல்தான் தலைமைத்துவம் குறித்து பிரதமர் லீ

சிங்கப்பூர்-ஜோகூர் உறவுகள் வளர்ச்சி கண்டுள்ளன

2 mins read
e43b035d-a7f6-4089-9012-c6e99b8db665
பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய மனைவி ஹோ சிங்கும் (நடுவில்) ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், ராணி ஸரித் சோஃபியா, ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராகிம், அவருடைய மனைவி கலீடா ஆகியோருக்கு இஸ்தானாவில் விருந்து உபசரிப்பு அளித்துச் சிறப்பித்தனர். - படம்: சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர்/ஃபேஸ்புக்

சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரின் திறன்மிக்க தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையேயான உறவு வளர்ந்துள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இஸ்தானாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரவு உணவு விருந்து உபசரிப்பில் ஜோகூர் ஆட்சியாளரும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பங்கேற்றனர்.

புதன்கிழமை பிரதமர் லீ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “வர்த்தக, தொடர்பை மேம்படுத்த பெரிய அளவிலான திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் லிங்க் திட்டமும் அவற்றுள் அடங்கும். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்த கலந்துரையாடலைத் தொடங்குவதை எதிர்நோக்குகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான பரந்த ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து பணியாற்ற, பணிக்குழு ஒன்றை அமைக்க சிங்கப்பூரும் மலேசியாவும் ஜூலையில் இணக்கம் தெரிவித்திருந்தன. அக்டோபரில் நடைபெறும் சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இத்திட்டம் குறித்து அனேகமாக கலந்தாலோசிக்கப்படும்.

“மலேசியாவுக்கான சிங்கப்பூரின் நுழைவாயிலாக ஜோகூர் விளங்குகிறது. பல தலைமுறை நட்பு, உறவால் இணைக்கப்பட்ட பங்காளிகளாக சிங்கப்பூரும் ஜோகூரும் உள்ளன,” என்றார் பிரதமர் லீ.

சுல்தான் இஸ்கந்தர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இருதரப்பு மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அனுகூலங்களைப் பெற்றுத் தர ஜோகூரும் சிங்கப்பூரும் சேர்ந்து பணியாற்றலாம் என்றார்.

பிரதமர் லீயின் மனைவி திருவாட்டி ஹோ சிங், ஜோகூர் ராணி ஸரித் சோஃபியா, ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராகிம், அவருடைய மனைவி கலீடா, சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், அவருடைய மனைவி திருவாட்டி சீதா சண்முகம் ஆகியோரும் விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டனர்.

தமது கடைசி ஜோகூர் பயணத்தின்போது தாம் விரும்பிய ‘நாசி உலாம்’ உணவு அளித்து சுல்தான் இப்ராகிம் உபசரித்ததாக பிரதமர் லீ குறிப்பிட்டார். ‘நாசி உலாம்’, பாரம்பரிய மலாய் மூலிகை சோறு சாலட்டாகும்.

“அவரது விருந்தோம்பலுக்குக் கைமாறாக, நண்டு கறியும் அவருக்குப் பிடித்த இதர உள்ளூர் உணவு வகைகளையும் பரிமாறினோம்,” என்று பதிவிட்ட பிரதமர் லீ, செப்டம்பரில் சிங்கப்பூரில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் தாங்கள் சந்தித்ததாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்