கள்ளப்பண விவகாரம்: அதிபர் சவால் நிதி, சமூக உண்டியலுக்கு நன்கொடை

2 mins read
e31e5046-a863-4176-b4bf-d29b4a67d1b1
சமூக உண்டியல் அமைப்பும், அதிபர் சவால் நிதி அமைப்பும் காவல்துறையிடம் புகார் செய்து இருக்கின்றன. - படங்கள்: காவல்துறை, ஃபேஸ்புக், சமூக உண்டியல், அதிபர் சவால் நிதி 

தனிப்பட்ட சிலர் சமூக உண்டியலுக்கு (கம்செஸ்ட்) $30,000 நிதியையும் அதிபர் சவால் நிதிக்கு $350,000க்கும் மேற்பட்ட தொகையையும் நன்கொடையாக வழங்கினர்.

அந்த நன்கொடையாளர்களின் பெயர்கள், $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இருப்போரின் பெயர்களைப் போல இருக்கின்றன.

இதனை சமூக உண்டியல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி சார்மைன் லியுங் புதன்கிழமை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அதையடுத்து சமூக உண்டியல் அமைப்பு காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கிறது.

அதேபோல, தன் அமைப்பும் காவல்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளதாக அதிபர் சவால் நிதி அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டு இருக்கும் நன்கொடைகள் இதனால் பாதிக்கப்படமாட்டாது என்று இரண்டு அமைப்புகளும் தெரிவித்து உள்ளன.

அந்த நன்கொடைகளை எப்படி கையாளுவது என்பதன் தொடர்பில் இந்த அமைப்புகள் அறப்பணி ஆணையருடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகின்றன.

கள்ளப்பண விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் 10 பேரில் நன்கொடை வழங்கியது யார் என்பதை அந்த இரண்டு அமைப்புகளும் தெரிவிக்கவில்லை.

இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ இது பற்றி நாடாளுமன்றத்தில் அக்டோபர் 3ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தார்.

கள்ளப்பண விவகாரம் தொடர்பில் கைதாகி இருக்கும் சிலர், சிங்கப்பூரில் உள்ள அறப்பணி அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி இருப்பதாக அவர் அமைச்சர்நிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

கள்ளப்பண விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள 10 பேரில் சிலரிடம் இருந்து பல்வேறு அமைப்புகளும் பணம் பெற்று இருக்கின்றன என்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து இருந்தது.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

அதன் விளைவாக ஒன்பது ஆடவர்களும் ஒரு மாதும் பிடிபட்டனர். அவர்கள் மீது அடுத்த நாளன்று குற்றம் சுமத்தப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த அந்த 10 பேரும் வேறு பல நாட்டின் குடிமக்களாக ஆகி இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்