சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் பூப்பந்துப் பயிலகத்தைச் சேர்ந்த, உயர்நிலை 2 மாணவர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துவிட்டதை அப்பள்ளி உறுதிப்படுத்தியது.
இம்மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமை 400 மீட்டர் ஓட்ட உடலுறுதி நேரச் சோதனையில் பங்கேற்றபின் அந்த 14 வயது மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தனது பாதுகாப்பு நெறிமுறைகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டு, பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தெரிவித்துள்ளது.
விசாரணை நடந்துவருவதால், இப்போதைக்குக் கூடுதல் விவரம் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அது கூறியது.
மாணவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பள்ளி புதன்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தின் முகப்புப் படத்தையும் பள்ளியின் சின்னத்தையும் முழுவதும் கறுப்பாக்கி, துக்கம் கடைப்பிடித்தது.
“பூப்பந்து விளையாட்டில் மிளிர்ந்த அம்மாணவர், விளையாட்டுடன் நடத்தையிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்,” என்று சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் முதல்வர் ஓங் கிம் சூன் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.
“எப்போதும் உற்சாகமாகவும் இன்முகத்துடனும் இருந்த அம்மாணவர், படிப்பிலும் பயிற்சியிலும் நேர்மறையான மனப்பாங்குடன் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தேசிய அளவில் தன் வயதுப் பிரிவுப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்த அவர், வளர்ந்துவரும் சிறந்த விளையாட்டாளராகத் திக்ழந்தார். சக மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் என அனைவராலும் விரும்பப்படுபவராக அவர் விளங்கினார்,” என்றும் திரு ஓங் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மாணவரின் குடும்பத்தார்க்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அப்பள்ளி தெரிவித்துக்கொண்டது.
இந்தத் துயரமான வேளையில், அம்மாணவரின் குடும்பத்தார்க்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அப்பள்ளி கூறியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவ விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு பள்ளி ஆலோசகர்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாணவ விளையாட்டாளர்களின் நல்வாழ்விற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அப்பள்ளி கூறியிருக்கிறது.