தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மரினா ஈஸ்ட் கடற்கரையில் காணப்பட்ட பெரிய முதலை கருணைக் கொலை செய்யப்படும்’

2 mins read
c393fb93-9265-4692-bb8b-aa145ef489ed
மரினா ஈஸ்ட் டிரைவில் உள்ள கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காலை காணப்பட்ட முதலை. - படம்: சிகே லீ/ஃபேஸ்புக்

மரினா ஈஸ்ட் டிரைவில் உள்ள கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காணப்பட்ட பெரிய முதலை ஒன்று பொதுமக்களின் பாதுகாப்புக்காக கருணைக் கொலை செய்யப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை, விழிப்புணர்வுத் துறை இயக்குநர் ஹாவ் சூன் பெங், கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமுள்ள உப்புநீர் முதலை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

“அதன் பொருட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பிடிபட்ட அந்த முதலை கருணைக் கொலை செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை அந்த முதலை தென்பட்டது குறித்து கழகத்துக்குத் தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார்.

வேறோர் இடத்துக்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக அந்த முதலை கருணைக் கொலை செய்யப்படுவதற்கான காரணம் குறித்து திரு ஹாவ்விடம் கேட்கப்பட்டது. பிடிபட்ட இடத்துக்கு அந்த முதலை திரும்புவதற்கான அபாயம் நிலவுவதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

பொதுவாக நன்னீர், உவர் நீர்ப் பகுதிகளில் உப்புநீர் முதலைகள் காணப்படும். மக்கள் நடமாட்டம் இல்லாத நீரில் அல்லது சேற்றில் அவை காணப்படும் என்றும் திரு ஹாவ் கூறினார்.

“அத்தகைய முதலைகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும். சிங்கப்பூரில் அவை மீன்களைச் சாப்பிடும்,” என்றார் அவர்.

இந்நிலையில், சிங்கப்பூர் ஊர்வன அறிவியல் சங்கத்தைச் சேர்ந்த அறிவியல் அலுவலரான திரு சிவராம் ராசு, அந்த முதலையைக் கருணைக் கொலை செய்வது கவலைக்குரியது என்றார்.

“அருகிவரும் இனத்தைச் சேர்ந்த அந்த முதலை, உயிரினச் சூழலியலில் ஓர் அடித்தளமாக விளங்குகிறது. அதைக் கருணைக் கொலை செய்வதற்குப் பதிலாக வேறோர் இடத்துக்கு அதை மாற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அடிக்கடி கடலுக்குச் செல்லும் உப்புநீர் முதலைகள், கரையோரப் பகுதிகளிலும் தீவுகளுக்கு இடையிலும் வந்துசெல்லும் என்று குறிப்பிட்ட திரு சிவராம், ஒரே இடத்தில் அவை அதிக நாள் இருக்க மாட்டா என்றார்.

குறிப்புச் சொற்கள்