தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செலவு உயரும், தங்குவோர் எண்ணிக்கை குறையும்: தங்குவிடுதி நடத்துவோரின் கவலைகள்

2 mins read
2710268b-44a6-4dcf-a0c0-e71d98523a3f
டீ அப் தங்குவிடுதி நிர்வகிக்கும் இந்த அறையில் ஈரடுக்குப் படுக்கைகளில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குகின்றனர். புதிய விதிமுறைப்படி இந்த அறையில் கழிவறை கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக அவற்றை நடத்துவோர் சிரமங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

அவர்களில் ஒருவரான சதர்ன் ஏர்கண்டிஷனிங் என்ஜினியரிங் நிறுவன இயக்குநர் திருவாட்டி ஜோலீன் டியோ, தாகூர் லேனில் உள்ள தனது தொழிற்சாலையில் உள்ள தங்குவிடுதியைப் புதுப்பிக்க கிட்டத்தட்ட $80,000 செலவாகும் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது அந்த தங்குவிடுதியின் பெரிய அறை 80 ஊழியர்களுக்கு இடமளிக்கிறது.

புதன்கிழமை மனிதவள அமைச்சு இடைக்கால விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன்னரே புதுப்பிப்புத் திட்டத்தை வகுத்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கிட்டத்தட்ட 1,000 தங்குவிடுதிகளின் தங்குமிடத்தின் தரத்தை உயர்த்துவதற்கான உருமாற்றத் திட்டத்தை அமைச்சு அறிவித்தது. 2040ஆம் ஆண்டுக்குள் அந்த தங்குவிடுதிகள் ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் அமைச்சு கூறியது.

விதிமுறைகளுக்கு உட்பட வேண்டி இருப்பதால் தேவையான செலவை செய்தே ஆகவேண்டிய நிலை இருப்பதாக திருவாட்டி டியோ கூறினார்.

யூனிசன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் கோ பூ குயி தமது நிறுவனத்தின் துவாஸ் தங்குவிடுதியில் அமைச்சு அறிவித்த இடைக்கால விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் பெரிய அளவிலான மறுவடிவமைப்பை செய்ய வேண்டி இருக்கலாம் என்றார்.

2027ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுக்குள் இந்த தங்குவிடுதிகள் கட்டங்கட்டமாக இடைக்கால விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். ஓர் அறையில் அதிகபட்சம் 12 பேர் தங்க வேண்டும் என்பதும் அந்த அறைகள் கழிவறைகளோடு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் விதிமுறைகளுள் அடங்கும்.

பொதுச் சுகாதார அபாயத்தைத் தவிர்க்க இவ்வாறு செய்வது அவசியமாகிறது.

திரு கோவின் துவாஸ் தங்குவிடுதியின் மூலைகளில் உள்ள பெரிய அறைகளில் தற்போது 20 ஊழியர்கள் தங்கியுள்ளனர். இந்த அளவைக்கு குறைக்க வேண்டிய அவசியம் அவரது நிர்வாகத்திற்கு ஏற்பட்டு உள்ளது.

ஒவ்வோர் அறையிலும் கழிவறை கட்ட இயலாத நிலை இருப்பதால் மனிதவள அமைச்சிடம் விதித் தளர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விதி தளர்த்தப்பட்டாலும், தற்போதைய கழிவறைகளைப் பெரிதாக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு உட்படவேண்டும் என்பதால் தற்போதைய அறைகளின் இடத்தை அதற்குப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளதாக திரு கோ தெரிவித்தார்.

இந்நிலையில், தங்குவிடுதி நடத்துவோரின் நலன்களைக் கவனிப்பதாக அரசாங்கம் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது என்று சிங்கப்பூர் தங்குவிடுதி சங்கத்தின் இரண்டாம் துணைத் தலைவர் யூஜின் ஆவ் தெரிவித்து உள்ளார்.

மனிதவள அமைச்சின் உருமாற்றத் திட்டம் நியாயமான முறையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செலவுகள் கூடுவது பற்றியும் தங்குவோரைக் குறைப்பது பற்றியும் விடுதி நடத்துநர்கள் கவலைப்பட்டாலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அனைவரின் நோக்கம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்