தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்து விதிமீறல்: 24 மோட்டார்சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்

2 mins read
d0fa565e-269d-4132-9af0-122f34d76be3
உரிமம் இல்லாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டியதற்காக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 24 மோட்டார்சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்.

அக்டோபர் 6ஆம் தேதி மாலை உச்ச நேரத்தில் தீவு விரைவுச்சாலை, புக்கிட் தீமா விரைவுச்சாலையில் போக்குவரத்துக் காவல்துறையினர் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்போது முதல் அரை மணி நேரத்தில் எட்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்.

மூன்று மணி நேரம் நீடித்த அமலாக்க நடவடிக்கையின் முடிவில் பிடிபட்ட 24 மோட்டார்சைக்கிளோட்டிகள் 19 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் இரு ஆடவர்கள், செல்லுபடியாகும் உரிமம், காப்புறுதியின்றி ஓட்டியதற்காக பிடிபட்டனர்.

தமக்குச் சொந்தமில்லாத ‘யமஹா ஆர்6’ மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஒருவர், புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மாலை 5 மணியளவில் ஓரங்கட்டப்பட்டார். அவரைக் கைது செய்த அதிகாரிகள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த 24 மோட்டார்சைக்கிளோட்டிகளில் 10 பேர் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களை ஓட்டினர்.

மோட்டார்சைக்கிளோட்டிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அண்மைய அமலாக்க நடவடிக்கையின்போது போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றது.

“சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் பட்டியலில், மோட்டார்சைக்கிளோட்டிகளும் மோட்டார்சைக்கிள்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் அதிக எண்ணிக்கை வகிக்கின்றனர்,” என்று போக்குவரத்துக் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் பொருட்டு, மோட்டார்சைக்கிளைப் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான இயக்கம் ஒன்றைப் போக்குவரத்துக் காவல்துறை வெள்ளிக்கிழமை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

வேகமாக ஓட்டுவது, போக்குவரத்து விளக்கு சிவப்புக்கு மாறும்போது நிற்காமல் செல்வது, அனுமதிக்கப்படாத தலைக்கவசம் அணிவது ஆகியவை இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மோட்டார்சைக்கிளோட்டிகள் அதிகம் புரிந்த மூன்று குற்றங்கள் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்