சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை படம்பிடித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பெண் மீது வெள்ளிக்கிழமை ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பொது இடத்தில் தொந்தரவு விளைவித்தது அவற்றில் ஒன்று.
சீன நாட்டவரான ஹான் ஃபெய்ஸி மீது, அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டியதற்கான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அக்டோபர் 3ஆம் தேதி பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
வெள்ளிக் கிழமை காலை 9.40 மணிக்கு ஹான் காணொளி வழியாக விசாரணைக்கு முன்னிலையானார். கறுப்பு சட்டை அணிந்திருந்த அவர் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை வியாழக்கிழமை விசாரணையில் விசாரித்த காவல்துறையினர், செவ்வாய்க்கிழமை 2.35 மணியளவில் ஒரு நோயாளி தகாத வார்த்தைகளால் மோசமாக பேசுவதாக தகவல் கிடைத்து அங்கு சென்றதாகக் கூறினர்.
அப்போது ஹான் தனது காலில் இருந்த காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அளவுக்கு அவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை வருவதற்கு முன்பே அங்கிருந்த தாதியை அவர் சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்பட்டது.
அங்கு வந்த இரண்டு விசாரணை அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அதற்கு ஒத்துழைக்க மறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியிருக்கிறார். அதிகாரிகளிடம் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தானே படம் பிடித்து சமூக ஊடகமான ‘டூயின்’ தளத்தில் அவர் பதிவேற்றியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் காணொளி டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
அக்டோபர் 3ஆம் தேதி நடந்த சம்பவத்தில் குடித்திருந்த ஹானை மரினா பே ‘த செய்ல்’ பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது அதிகாரிகளை அவர் தகாத முறையில் பேசியதாகவும் ஒரு அதிகாரியின் கழுத்துப் பட்டையைப் பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.