தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-அமெரிக்கா சேர்ந்து உலகிற்கு உதவ முடியும்: துணைப் பிரதமர்

2 mins read
உலகப் பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு ஏற்படுவதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தலாம்
2a594084-ddf9-47be-87b7-32808ba4466e
சிங்கப்பூரும் அமெரிக்காவும் புத்தாக்கத்தில் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக உள்ளன. முக்கியமான நவீன தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, இரு நாடுகளும் ஒரே சிந்தனை உள்ள பங்காளிகளாக இருக்கின்றன என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். - படம்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: சிங்கப்பூரும் அமெரிக்காவும் சேர்ந்து செயல்பட்டு, உலகின் முக்கியமான பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு ஏற்படுவதை உறுதிப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திரு வோங், மிக முக்கிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பில் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதன்முதலாக நடந்த பேச்சுவார்த்தையின்போது தொடக்க உரையாற்றினார்.

இயந்திர மனித தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, கணினித் தகவல் அறிவியல் தொழில்நுட்பம் போன்ற புதிய முக்கியமான தொழில்நுட்பங்கள் தேசிய தற்காப்பிலும் பொருளியல் செழிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் புதிய புதிய நம்பிக்கைகளை கொடுக்கின்றன. அதேநேரத்தில் வேலைகளுக்கு வேட்டு வைத்துவிடும் என்ற பயமும் நிலவுகிறது.

மோசடிகள் அதிகமாகவும், பொய்த் தகவல்கள் தலைதூக்கவும் வழிவழியான நியதிகளைப் பற்றி கேள்வி எழுப்பவும் அவை வழி வகுக்கின்றன என்பதை துணைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“அத்தகைய பிரச்சினைகளைக் கையாள வேண்டுமெனில் சரியான தரங்களும் ஆளுமை ஏற்பாடுகளும் நடப்பில் இருக்கவேண்டும்.

‘‘இவை சிக்கலான விவகாரங்கள். இவற்றை எந்தவொரு நாடும் தனியாகச் செயல்பட்டு சமாளித்துவிட இயலாது என்று தெரிவித்த திரு வோங், இத்தகைய பெரும் பிரச்சினைகளைக் கையாள உதவும் வகையில் நடந்த அமெரிக்கா-சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

“மலையும் மடுவும் போல் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அளவில் பெரும் வேறுபாடு இருக்கிறது.

“இருந்தாலும் புத்தாக்கத்துறையைப் பொறுத்தவரை இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாகச் செயல்படுகின்றன.

“முக்கியமான புதிய தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே சிந்தனை உள்ள பங்காளிகளாக உள்ளன,” என்று அவர் கூறினார்.

அறிவியல் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு உள்ள முன்னணி அனுகூலங்கள் அளவுக்குச் சிங்கப்பூருக்கு இல்லை என்றாலும் உலகளாவிய புத்தாக்கத் துறையில் பயனுள்ள பங்கை சிங்கப்பூர் ஆற்ற முடியும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்பங்களுக்காக பயன்படுத்தக்கூடிய பொதுவான தொழில்நுட்பத் தரங்கள் தொடர்பில் முன்னதாகவே இணக்கத்தை எட்ட சிங்கப்பூர் உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, அந்தப் பேச்சுவார்த்தை முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இயந்திர மனிதத் தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல், உயிரியல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதிய இரு தரப்பு முயற்சிகளைத் தொடங்குவதற்கு அமெரிக்காவும் சிங்கப்பூரும் உறுதி தெரிவித்து இருப்பதாக அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

அந்தக் கலந்துரையாடலின் அடுத்த சுற்று 2024ல் சிங்கப்பூரில் நடக்கும்.

துணைப் பிரதமர் திரு வோங் அமெரிக்க உயர் அதிகாரிகளைச் சந்தித்தார். இரு தரப்பு ஒத்துழைப்பு, புவிசார் அரசியல் பிரச்சினைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

குறிப்புச் சொற்கள்