ஸ்கூட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆஸ்திரேலியர் மீது குற்றச்சாட்டு

ஸ்கூட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆஸ்திரேலியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
f9cfc2b0-a0e0-45bc-8d4e-ae4f1b932282
ஸ்கூட் விமானத்தைப் பாதுகாப்பாக சாங்கி விமான நிலையத்துக்குக் கொண்டு வந்துசேர்க்க சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.  - சிங்கப்பூர் ராணுவ விமானத்துறை புகைப்பட அமைப்பு/ஃபேஸ்புக்

பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 30 வயது ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் மீது சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடைய பொய் மிரட்டல் விடுத்ததாக ஹாவ்கின்ஸ் கெவின் ஃபிரான்சிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் விமானப் பணியாளர் ஒருவரிடம், “என்னிடம் வெடிகுண்டு உள்ளது,” என்றும் வேறொருவரிடம் “வெடிகுண்டு” என்றும் அந்த ஆடவர் சொன்னதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

அன்றைய தினம் மாலை 4.55 மணியளவில், சிங்கப்பூரிலிருந்து பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த டிஆர்16 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

தம்மிடம் வெடிகுண்டு இருந்ததாக விமானப் பணியாளர்களிடம் அந்த ஆடவர் பலமுறை கூறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை போர் விமானங்கள் உதவியுடன் அந்த ஸ்கூட் விமானம் சிங்கப்பூர் திரும்ப நேரிட்டது.

மாலை 6.26 மணிக்கு அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர், மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்