உல்லாசக் கப்பல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 39 வயது ஆடவர் ஒருவர் மீது சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
நியோ ஹுவி கிம் என்ற அந்த ஆடவர், ரிசார்ட்ஸ் வொர்ல்ட் குரூசஸ் நிறுவனத்திடன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அனுப்பிய மின்னஞ்சலின் தலைப்பில், ‘ரிசார்ட்ஸ் வொர்ல்ட் குரூசசில் வெடிகுண்டு’ என்று குறிப்பிட்டிருந்தார்.
“தயவுசெய்து என் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால், கப்பல் வெடித்து அனைவரும் கடலில் வீசப்படுவார்கள்,” என்று நியோ அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.
மரினா பே உல்லாசக் கப்பல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கப்பல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து வெள்ளிக்கிழமை மாலை 4.03 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையிடனருடன் சேர்ந்து குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளும் உல்லாசக் கப்பல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களும் கப்பலில் தீவிரமாகப் பரிசோதனை செய்தனர்.
கப்பலில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள், மத்திய காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தச் சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிசெய்து அவரைக் கைது செய்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் நியோ தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உல்லாசக் கப்பலிலில் நடத்தப்பட்ட தீவிர பாதுகாப்புப் பரிசோதனையின் காரணமாக செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், அக்கப்பலில் ஏறுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 4,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.