அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு ஒரு புதிய பாணி உலகமயத்தை உருவாக்க சிங்கப்பூர் விரும்புகிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிதி அமைச்சருமான திரு வோங், வாஷிங்டனில் மிகவும் செல்வாக்குமிக்க அறிவுஜீவிகள் அமைப்பு ஒன்றின் கலந்துரையாடல் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
சட்ட விதிகளின் அடிப்படையிலான உலக அமைப்புகளின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாக அப்போதைக்கு அப்போது கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு, பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பின் மீள்திறன் போன்ற பிரச்சினைகளைப் போதிய அளவுக்கு அவை தீர்க்கவில்லை என்று குறைகூறப்படுகிறது என திரு வோங் கூறினார்.
புதிய பாணி உலகமயத்தை உருவாக்குவதில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட சிங்கப்பூர் மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஐநா, அனைத்துலக பண நிதியம், உலக வர்த்தக நிறுவனம் போன்ற அமைப்புகள், சட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படும் உலக அமைப்புகள் ஆகும்.
வர்த்தகம், புதுப்புது கருத்துகள், யோசனைகள் எல்லாம் தாராளமாக புழங்க வேண்டும்; அதன்வழி அமைதியும் செழிப்பும் ஓங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய அமைப்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்டன.
இருந்தாலும்கூட அவை இப்போதைய புதிய புவிசார் அரசியல் நிலவரங்களைத் திறம்பட பிரதிபலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து நாடுகளுக்கும் நன்மைகளை ஏற்படுத்தித் தரும் வகையில் உலக அமைப்புகளுக்கு அமெரிக்க தலைமைத்துவம் உருகொடுத்தது. அந்தத் தலைமைத்துவம் தொடர வேண்டியது தேவையான ஒன்று என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“ஆசியப் பசிபிக்கில் அமெரிக்கா ஆக்ககரமான முறையில் முக்கியமான ஒன்றாகத் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதைச் சிங்கப்பூர் வரவேற்கிறது, முக்கியமானதாகக் கருதுகிறது,” என்று கூறிய திரு வோங், சுமார் 80 ஆண்டு காலமாக இந்த வட்டாரத்தின் ஒரு தூணாக அமெரிக்கா திகழ்ந்து வந்திருக்கிறது என்றார்.
உலகின் இந்தப் பகுதியில் அமெரிக்கா அடுத்த 80 ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதைக் காணவே சிங்கப்பூர் விரும்புகிறது என்றாரவர்.
ஒரு மணி நேரம் நடந்த அந்த கலந்துரையாடலில் திரு வோங்கிடம் பலதரப்பட்ட கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டாபோட்டி அதிகரிக்கும் சூழலில் சிங்கப்பூர் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டதற்குப் பதிலளித்த திரு வோங், சிங்கப்பூர் தன்னுடைய தேசிய நலன்களை முன்நிறுத்திச் செயல்படுவதாகக் கூறினார்.
சில சூழ்நிலைகளில் சிங்கப்பூர் எடுக்கும் முடிவுகள் அந்த இரண்டு நாடுகளில் ஏதோ ஒன்றுக்கு அனுகூலமாக இருப்பது போலத் தோன்றும்.
ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது சீனா ஆதரவு நாடோ, அமெரிக்க ஆதரவு நாடோ அல்ல. சொல்லப்போனால் சிங்கப்பூர், சிங்கப்பூருக்கு ஆதரவான நாடு என்று திரு வோங் கூறினார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே நேரத்தில் தோழமை நாடாக சிங்கப்பூர் திகழ்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் திரு வோங் தெரிவித்தார்.
திரு வோங், அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஜினா ரெய்மோன்டோ, அமெரிக்க வர்த்தகப் பேராளர் கேத்தரின் டாய் ஆகியோரையும் சந்தித்தார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா பொருளியல் ரீதியில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்பதை வரவேற்பதாக திரு வோங் கூறினார்.
துணைப் பிரதமர் திரு வோங், அமெரிக்காவுக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ வருகையை முடித்துக்கொண்டார்.