சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் பேட்மிண்டன் பயிலகத்தைச் சேர்ந்த உயர்நிலை 2ஆம் வகுப்பு மாணவரான பிரணவ் மாதேக், 14, அக்டோபர் 5ஆம் தேதி 400 மீட்டர் உடலுறுதி நேர சோதனையை முடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த பதின்ம வயது மாணவர் புதன்கிழமை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அந்தச் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடந்தப்படும் என்று சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தெரிவித்தது.
தனது பாதுகாப்பு நியதிகளும் ஏற்பாடுகளும் முற்றிலும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பெற்றோருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அந்தப் பள்ளி புதன்கிழமை கூறியது. புலன்விசாரணை நடப்பதால் மேல் விவரங்களைத் தெரிவிக்க இயலாது என்றும் அது தெரிவித்தது.
இதனிடையே, அந்த மாணவரின் தந்தையான திரு மாதேக், 51, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார்.
விளையாட்டுப் பள்ளி தனக்கு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
வேறு எந்தப் பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.