பிரணவ் மாதேக், 14, என்ற உயர்நிலை 2ஆம் வகுப்பு மாணவர் மரணத்தை அடுத்து சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (எஸ்எஸ்பி) பேட்மிண்டன் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டது.
அந்தச் சம்பவம் பற்றி விளையாட்டுப் பள்ளி புலன்விசாரணை நடத்தியது.
மாணவரின் உடல்நலனை அந்தப் பயிற்றுவிப்பாளர் சோதித்து மாணவர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை அந்தப் பள்ளி கூறியது.
தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்து அவற்றைப் பலப்படுத்தி வருவதாகவும் எஸ்எஸ்பி கூறியது.
மாணவர் பிரணவ் அக்டோபர் 5ஆம் தேதி 400 மீட்டர் உடலுறுதி நேரச் சோதனையை மாலை 6.26 மணிக்கு முடித்து இருந்தார்.
பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை. பேட்மிண்டன் பயிற்றுவிப்பாளரிடம் சென்று தனக்கு என்னவோ செய்வதாகக் கூறினார்.
ஓய்வு எடுக்கும்படி மாணவரிடம் தெரிவிக்கப்பட்டது.
பிரணவ், ஓர் ஓரமாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது பயிற்றுவிப்பாளர் அந்த மாணவரின் கைப்பேசியில் நேர சோதனைத் தகவல்களைச் சரி பார்த்துக்கொண்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு இதர மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க அந்தப் பயிற்றுவிப்பாளர் போய்விட்டார். பிறகு அப்படியே அவர் பள்ளிக்கூடத்தைவிட்டு சென்றுவிட்டார்.
மாலை சுமார் 6.40 மணி இருக்கும். அப்போது திடல்தட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் பிரணவ் அமர்ந்து இருப்பதைப் பார்த்து உடல்நிலை பற்றி கேட்டார். குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது.
பிரணவ்வை தூக்கி நிறுத்தியபோதும் அவரால் நிற்க முடியவில்லை என்பது திடல்தட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்குத் தெரியவந்தது.
அவர், பள்ளியில் தங்கி இருக்கும் ஊழியரை உதவிக்கு அழைத்தார். அப்போது மணி இரவு 6.45. மருத்துவ வாகனம் இரவு 6.50 மணிக்கு அழைக்கப்பட்டது. அந்த வாகனம் இரவு 7.02 மணிக்கு வந்தது.
இதனிடையே, பள்ளிக்கூட ஊழியர்கள் பிரணவ்வின் பெற்றோருடன் தொடர்பு கொண்டனர்.
பிரணவ் இரவு சுமார் 7.19 மணிக்குத் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது பேட்மிண்டன் பயிற்றுவிப்பாளர் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி இருந்தார். அவரும் பிரணவ்வுடன் மருத்துவமனைக்குச் சென்றார். பிரணவ் வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
என்றாலும் ஆறு நாட்கள் கழித்து அப்டோபர் 11ஆம் தேதி பிரணவ் மரணமடைந்தார். இதயம் செயல்படாமல் போனது காரணம் என்பது தெரியவந்தது.
இதனிடையே, விளையாட்டுப் பள்ளி நிர்வாகம், மாணவர் பிரணவ்வின் பெற்றோரை வெள்ளிக்கிழமை சந்தித்தது. நடந்தவற்றை அவர்களிடம் எடுத்துக் கூறியது.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக மாணவர் பிரணவ்வின் தந்தையான திரு பிரேம் சிங், 51, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார்.
“விளையாட்டுப் பள்ளியில் முறையான ஏற்பாடு நடப்பில் இருந்திருந்தால் இந்த வகை சம்பவத்தைத் தவிர்த்து இருக்கலாம்.
“சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது. அங்கு பயிற்சி கடுமையாக இருக்கும்.
“மருத்துவ வாகனம் வர காத்திருந்து மருத்துவமனைக்குப் போவதற்குள் விபரீதம் நிகழ்ந்துவிடுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில், எதிர்பாராமல் திடீரென்று ஏற்படக்கூடிய அவசர நிலையைக் கையாள பள்ளியில் ஏதாவது ஓர் ஏற்பாடு இருக்க வேண்டும்,” என்று திரு சிங் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, மாணவர் பிரணவ் மரணத்திற்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி காரணம் என்று கூறுவது உண்மையல்ல. அப்படி கூறுவது பொறுப்பற்ற ஒரு செயல் என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.
அந்த மாணவரின் மரணத்திற்கு இதயம் செயல்படாமல் போனதே காரணம் என்று சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தெரிவித்து இருப்பதை அமைச்சு சுட்டியது.
மாணவர் பிரணவ் 18 மாதங்களுக்கு முன் ஃபைசர்-பயோயென்டெக்/கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சின் தடுப்பூசி பதிவேடு தெரிவிக்கிறது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இல்லை என்றாலும் அன்றாடம் சுமார் 60 பக்கவாதமும் மாரடைப்பும் ஏற்படுவதை அமைச்சு சுட்டியது.
இந்த இரண்டையும் தொடர்புபடுத்துவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று அமைச்சு கூறியது.