டிபிஎஸ் வங்கி, சிட்டிபேங்க் வாடிக்கையாளர்கள் பலரால் சனிக்கிழமை பிற்பகல் அவ்வங்கிகளின் இணைய, கைப்பேசிச் சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.
டிபிஎஸ் வாடிக்கையாளர்களால் நேரடிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி அட்டைகளையும் பயன்படுத்த இயலவில்லை.
சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ இணையப்பக்கத்தில் பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு டிபிஎஸ் குறித்த புகார்கள் ஏறுமுகம் கண்டன. மாலை 4.08 மணிக்கெல்லாம், 3,800 பேர் புகார் தெரிவித்துவிட்டனர்.
‘டௌன்டிடெக்டர்’ பக்கத்தைப் பொறுத்தவரை, சிட்டிபேங்க் சேவைத் தடை குறித்து மாலை 4.42 மணி நிலவரப்படி 279 புகார்கள் எழுந்தன.
டிபிஎஸ் சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தனது வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இயலாததை ஒப்புக்கொண்டது. பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
‘ஹார்ட்வேர்ஸோன்’ இணையப்பக்கத்திலும் பயனாளர்கள் புகார் எழுப்பினர். ஃபேஸ்புக்கில் டிபிஎஸ், பிஓஎஸ்பி பதிவுகளுக்குக் கருத்து கூறிய பயனாளர்கள், வங்கியின் செயலியையும் இணையப்பக்கத்தையும் தங்களால் பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பினர். கடைகளில் கட்டணம் செலுத்த வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
டிபிஎஸ், பிஓஎஸ்பி, சிட்டிபேங்க் அட்டைகளைக் கொண்டு கட்டணம் செலுத்த முடியாது என்று ஃபேர்பிரைஸ் கைப்பேசிச் செயலியிலும் எச்சரிக்கப்பட்டது.
தோ பாயோ ஹப்பிலும் பீஷான் ஜங்ஷன் 8, கம்பஸ் ஒன் கடைத்தொகுதிகளிலும் தானியக்க வங்கி இயந்திரங்களை (ஏடிஎம்) பிஓஎஸ்பி வாடிக்கையாளர்களால் பயன்படுத்த இயலவில்லை என்று அறியப்படுகிறது.