தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வியில் சாதிக்க வயது ஒரு தடையல்ல

3 mins read
7bfb94d4-0309-4908-b6c3-69ada0d6abdc
தன் தாயாருடன் ஸ்வப்னா. - படம்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
multi-img1 of 3

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்வாண்டு கிட்டத்தட்ட 3,000 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். அவர்களில் சமூகச் சேவை உள்ளம் கொண்ட ஸ்வப்னாவும் தமிழ்மொழியில் ஆர்வமுடைய தீபலட்சுமியும் அடங்குவர்.

மூப்படையும் சமுதாயத்திற்கு உதவ வேட்கை

ஸ்வப்னா தயானந்தனின் வாழ்வில் சமூகச் சேவை ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் தொண்டாற்றி வரும் இவருக்கு அந்த மனப்பான்மையை வித்திட்டது அவருடைய பெற்றோர்தான்.

இல்லத்தின் முன்னாள் தலைவரான 52 வயதாகும் ஸ்வப்னா, அங்கு தொண்டாற்றும்போது முதியவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

முதியவர்களின் மனக்குறை, இடர்ப்பாடு போன்றவை, அவர்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள ஸ்வப்னாவிற்குத் தூண்டுதலாக அமைந்தது. அதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா, முதுமையியல் தொடர்பான பணிக்கு மாற முடிவெடுத்தார்.

முதுநிலைப் பட்டதாரியான ஸ்வப்னா, தன் 48ஆவது வயதில் முதுமையியல் சார்ந்த கல்வியறிவு பெறுவதற்கு முனைவர் படிப்பு மேற்கொள்ள முடிவெடுத்தார். தன் அப்பாவின் பராமரிப்பாளராக இருந்த அனுபவமும் அவர் அதை மேற்கொள்ள மற்றொரு காரணமாக அமைந்தது.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வப்னாவின் தந்தை, தொடக்கத்தில் தக்க சிகிச்சையைப் பெற்று உடல்நலத்துடன் இருந்தார். ஆனால், 2017ஆம் ஆண்டில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டது. தந்தையைக் கவனிக்க மறந்த ஸ்வப்னா, 2018ல் அவரை இழந்தார். தந்தையின் எதிர்பாராத இறப்பு ஸ்வப்னாவைப் பலவகையிலும் கவலையில் ஆழ்த்தியது.

தந்தையுடன் அதிக நேரம் செலவழித்திருக்கலாம் என்ற வருத்தம் இன்னும் தன் மனத்தில் நிழலாடிக் கொண்டிருப்பதாகக் கூறி, மனங்கலங்கினார் ஸ்வப்னா.

மூப்படையும் சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட முனைப்புடன் இருக்கும் ஸ்வப்னா, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.

சென்ற ஆண்டுக்குப்பின், முதுமையியலில் முனைவர் பட்டம் பெறும் இரண்டாவது மாணவர் என்னும் பெருமைக்குரிய ஸ்வப்னா, கூட்டுரிமை குடியிருப்புகளில் வாழும் முதியவர்கள், உதவிபெறும் முதியோர்க்கான தெரிவுகள், பிள்ளைகளைப் பிரிந்து வாழும் முதியவர்கள், முதுமையை ஒட்டி, அவர்களின் மனநிலையை மாற்றும் வழிகள் ஆகிய அம்சங்களில் இனிக் கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் ‘முதியோர் சேவையில் இன்பம்’ எனும் முதியோர் பராமரிப்புச் சேவை வழங்குநர்க்குத் தீர்வுகள் வழங்கும் பங்காளி நிறுவனத்தை நிறுவிய ஸ்வப்னா, “நடுத்தர வயதில் வாழ்க்கைத்தொழில் மாறுவது தவறன்று. சமுதாயம் என்ன கூறினாலும் நான் இந்த 52 வயதில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளேன்,” என்று பெருமையுடன் சொன்னார்.

தாமதமாக ஏற்பட்ட மொழியார்வம்

தமிழ்மொழி, இலக்கியத்தின்மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்தபோதிலும் வைத்தியநாதன் தீபலட்சுமி தன் இரு மகள்களின் ஊக்கத்தால் மட்டுமே அதை ஒரு முழுநேரப் பணியாக மாற்ற எண்ணினார்.

தனது 43 வயதில் தமிழ் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், மாணவர்கள் தமிழ்மொழியை விரும்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு முகவர் ஆலோசனைத் துறையில் பணியாற்றி வந்தவர் தீபலட்சுமி.

முழுநேரப் பணியில் இருந்துகொண்டே வீட்டு வேலைகளையும் மகள்களுக்குப் பாடம் கற்பிப்பதிலும் ஈடுபட்டு வந்த தீபலட்சுமி, வீட்டிற்கு அப்பாற்பட்டு கற்பித்தலை வெளியே கொண்டு செல்ல முற்பட்டார். அதற்குப் பேராதரவு அளித்தது அவருடைய மகள்கள்தான்.

தமிழகத்தின் திருச்சியிலிருந்து வந்த தீபலட்சுமி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் கல்விமுறைக்கு அறிமுகமானார்.

தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் இளநிலைப் பட்டம் பயிலத் தொடங்கிய இவர், கொவிட்-19 பரவல் சமயத்தில் குடும்பத்தின் பொருட்டு சிறிது காலம் விடுப்பு எடுத்து இந்தியா செல்ல வேண்டியிருந்தது. இதனால், அவர் கூடுதலாக ஓராண்டு படிக்க வேண்டியதாயிற்று. தற்போது கற்பித்தல் பயிற்சியை மேற்கொண்டு வரும் அவர், அடுத்து தேசிய கல்விக் கழகத்தில் சேரவுள்ளார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார். விழாவுக்கு முதல்முறையாக முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் தலைமை தாங்கினார். அவருடன் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புரவலரான அதிபர் தர்மன் சண்முகரத்னமும் இணைந்துகொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் ஓங் யி காங், “பெரும்பாலும் பெரியவர்கள் கல்விப் பாதையில் இறங்குவதை என்னால் உணர முடிகிறது. சிறுவயதில் பல்கலைக்கழகத்துக்குச் சென்று படிக்கத் தவறிய வாய்ப்பை மீண்டும் பெரியவர்களுக்கு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தொழில் முன்னேற்றத்திற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் ஊக்கமாக இருக்கும் இந்த வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்