டிபிஎஸ், சிட்டிபேங்க் வாடிக்கையாளர்கள் பலரால் வங்கிகளின் இணையச் சேவைகளையும் கைப்பேசிச் சேவைகளையும் சனிக்கிழமை பிற்பகலில் பயன்படுத்த இயலவில்லை.
டிபிஎஸ் வாடிக்கையாளர்கள் பலரால் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி அட்டைகளையும் பயன்படுத்த முடியாமல் போனது.
சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ இணையப்பக்கத்தில் பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு டிபிஎஸ் குறித்த அதிக புகார்கள் தாக்கலாயின. மாலை 4.08 மணிக்கெல்லாம், 3,800 பேர் புகார் தெரிவித்தனர்.
அதேபோல் சிட்டிபேங்க் சேவைகள் தொடர்பில் சனிக்கிழமை பிற்பகல் 4.42 மணி நிலவரப்படி 279 புகார்கள் தாக்கலாயின.
இதனிடையே, டிபிஎஸ் சனிக்கிழமை மாலை 6.08 மணிக்கு ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை வெளியிட்டது.
கணினித் தகவல் மையம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறே சேவை தடங்கலுக்குக் காரணம் என்பது தனது புலன்விசாரணை மூலம் தெரியவந்ததாக அது கூறியது.
அந்தக் கணினித் தகவல் மையத்தை இதர அமைப்புகளும் பயன்படுத்தி வருவதாகவும் டிபிஎஸ் தெரிவித்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் வழி டிபிஎஸ் பயன்படுத்துவதிலும் சிட்டிபேங்க் சேவையைப் பயன்படுத்துவதிலும் தாங்கள் பிரச்சினையை எதிர்நோக்கியதாக சமூக ஊடகங்களில் சிலர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா, தென்னாப்பிரிக்கா, கம்போடியா, இலங்கை, இந்தோனீசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், மாலத்தீவு ஆகிய நாடுகளில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவோரும் மெட்டா சேவைகளைப் பயன்படுத்துவோரும் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் இடையூறு பற்றி குறிப்பிட்டனர்.
டிபிஎஸ் இரவு 7 மணி முதல் கட்டம் கட்டமாக சேவைகள் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்ப்பதாக சனிக்கிழமை மாலை தெரிவித்தது.
தெம்பனிஸ் சென்ட்ரல், தெம்பனிஸ் ஒன், ஒயிட் சேண்ட்ஸ் தவிர டிபிஎஸ் கிளைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மீண்டும் செயல்பட வைக்கப்பட்டன.
முன்னதாக இந்த வங்கி, தனது வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இயலாமல் போனதை ஒப்புக்கொண்டது.
பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
சிட்டிபேங்க் சனிக்கிழமை மாலை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில், தனது கைப்பேசிச் செயலியும் இணைய வங்கிச்சேவைகளும் செயல்படாமல் போனதாகத் தெரிவித்தது.
அவை கட்டம்கட்டமாக பழைய நிலைக்குத் திரும்புவதாகக் கூறிய சிட்டிபேங்க், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
சேவை பாதிப்பு பற்றி ‘ஹார்ட்வேர்ஸோன்’ இணையப்பக்கத்திலும் பயனாளர்கள் புகார் எழுப்பினர்.
ஃபேஸ்புக்கில் டிபிஎஸ், பிஓஎஸ்பி பதிவுகளுக்குக் கருத்து கூறிய பயனாளர்கள், வங்கியின் செயலியையும் இணையப்பக்கத்தையும் தங்களால் பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பினர்.
கடைகளில் கட்டணம் செலுத்த வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியாமல் போனது என்றும் அவர்கள் கூறினர்.
டிபிஎஸ், பிஓஎஸ்பி, சிட்டிபேங்க் அட்டைகளைக் கொண்டு கட்டணம் செலுத்த முடியாது என்று ஃபேர்பிரைஸ் கைப்பேசிச் செயலியும் எச்சரித்தது.
தோ பாயோ, பீஷான், செங்காங்கில் உள்ள டிபிஎஸ் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்த இயலவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

