12 மணி நேரத்துக்குமேல் நீடித்த தடைக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பிய டிபிஎஸ் வங்கிச் சேவை

12 மணி நேரத்துக்குமேல் நீடித்த தடைக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பிய டிபிஎஸ் வங்கிச் சேவை

1 mins read
c6300799-6c7c-40ad-b22a-35d87c8544c9
அனைத்துச் சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அக்டோபர் 15ஆம் தேதி டிபிஎஸ் வங்கி தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிபிஎஸ் வங்கி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) காலை, அதன் வங்கிச் சேவைகள் அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்திருக்கிறது.

‘பேலா’, மின்னிலக்க வங்கிச் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பியதாக ஃபேஸ்புக்கில் அது பதிவிட்டது.

“வாடிக்கையாளர்கள் யாருக்கேனும் கைப்பேசிச் செயலி வாயிலாக வங்கிக் கணக்கை அணுக இயலாவிட்டால், குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் மறைச்சொல்லைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக அவர்கள் வங்கிச் சேவைகளை நாடலாம்,” என்று டிபிஎஸ் வங்கி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

“சேவைத் தடையின்போது சில வாடிக்கையாளர்கள் ‘பேநவ்’, ‘ஃபாஸ்ட்’ பரிவர்த்தனை முறைகளிலும் சிரமம் நேர்ந்ததாகக் கூறினர்.

“இத்தகைய புகார்களுக்கு முன்னுரிமை தந்து தீர்வு காணப்படும். பரிவர்த்தனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அனுப்பப்படும்,” என்று டிபிஎஸ் கூறியது.

சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சேவைத் தடை, 12 மணி நேரத்துக்குமேல் நீடித்ததாகக் கூறப்பட்டது. மாலை 4.10 மணியளவில் 3,800 பேர் டிபிஎஸ் வங்கிச் சேவைத் தடை குறித்து ‘டௌன்டிடெக்டர்’ இணையத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

சனிக்கிழமை மாலை 4.40 மணியளவில் சிட்டிபேங் வங்கிச் சேவைகளில் தடை ஏற்பட்டிருப்பதாக 279 பேர் கூறியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்