சிங்கப்பூரில் யூத, முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லுறவு, பிணைப்பு இருந்துவருகிறது.
பல சவால்கள் இருந்தாலும் அதை மேலும் பலப்படுத்துவதே இமாலய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று சிங்கப்பூரின் யூத சமயத் தலைவர் சிங்கப்பூர் முஃப்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யூத சமயத் தலைவரான ரப்பி மோர்டிசாய் அபர்ஜெல், சிங்கப்பூர் யூத நல்வாழ்வுக் கழகம் மூலம் ஃபேஸ்புக் பதிவு வழியாக ஞாயிற்றுக்கிழமை அந்தக் கடிதத்தை அனுப்பினார்.
சிங்கப்பூரின் முஃப்தியான டாக்டர் நசிருதீன் முகம்மது நசிர், வெள்ளிக்கிழமை யூத சமயத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
குடிமக்கள் மீதான வன்செயலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று அந்தக் கடிதத்தில் டாக்டர் நசிருதீன் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு சமூகமும் இதர சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைதியான சூழலில் வாழ முடியும். பன்மயத்தைக் கொண்டாட முடியும்.
இத்தகைய அமைதிகரமான சகோதரத்துவ சகவாழ்வை மேலும் பலப்படுத்துவது இப்போது இன்னும் முக்கியமானதாக ஆகி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அமைதியான தீர்வுகளைக் காண்பது சிரமமான ஒன்று என்றாலும் அது இயலாத ஒன்றல்ல என்றார் அவர்.
அமைதித் தீர்வுகளுக்குத்தான் அதிக முக்கிய முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று முஃப்தி வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்குப் பதில் அளித்த யூத சமயத் தலைவர், “இப்போது நிலவும் இருள் விலகி யூதர்கள், முஸ்லிம்கள், இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் அனைவருக்கும் அமைதி, வெளிச்சம் ஏற்பட வழி ஏற்படட்டும். இது நம் நாள்களிலேயே வேகமாக, தீர்க்கமாக நிகழட்டும்,” என்று தெரிவித்தார்.

