அடுத்த பத்தாண்டுகளில் சுவா சூ காங் நகரம் புதுப்பொலிவு காணும்போது மேலும் கட்டுப்படியாகக்கூடிய உணவு உண்ணும் இடத் தெரிவுகள், புதிய பொழுதுபோக்குப் பகுதிகள் போன்றவற்றை அங்குள்ள குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.
இயூ டீ எம்ஆர்டி நிலையம் அருகே மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பணிகள் 2027ஆம் ஆண்டு நிறைவுற்றதும் அந்நகரத்தின் முதல் உணவங்காடி நிலையம் தயாராகிவிடும்.
சுவா சூ காங் நகர மையத்தைப் பொலிவூட்டும் பணிகளின் ஒரு பகுதியாக இரண்டாவது உணவங்காடி நிலையம் கட்டப்படும். 2027ஆம் ஆண்டுவாக்கில் புதிய ஜூரோங் வட்டாரப் பாதை எம்ஆர்டி நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும் அந்த இரண்டாவது உணவங்காடி நிலையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கியட் ஹோங் சமூக மன்றத்தில் குடியிருப்பு வட்டாரத்தைப் பொலிவூட்டுவது தொர்பான கண்காட்சித் தொடக்க நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் மேம்பாட்டுப் பணிகளைப் பட்டியலிட்டார்.
தற்போதைய சுவா சூ காங் எம்ஆர்டி நிலையம் அருகே புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், நடையர் கடைத்தொகுதி, நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், விழாக்கால கடைகள் மற்றும் கட்டுடல் நடவடிக்கைகள் உள்ளிட்ட வர்த்தக, சமூக வசதிகளும் உருவாகும் என்று கூறினார் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு கான்.
குடியிருப்பாளர்களின் வாழ்க்கை வசதிகளை மேலும் கூட்டுவது, சமூகப் பிணைப்பை வலுப்படுவது, சுவா சூ காங் நகரை வாழ்வதற்கு, வேலை செய்வதற்கு, பொழுதுபோக்குவதற்கு ஏற்ற சிறந்த இடமாக உருவாக்குவது - என்னும் கருப்பொருளில் அமைந்த பொலிவூட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
வீவகவின் சுவா சூ காங் புதுப்பொலிவுத் திட்டத்தில் இயூ டீ, கியட் ஹோங் மற்றும் டெக் வாய் ஆகிய பகுதிகளும் இடம்பெற்று உள்ளன. இவற்றில் டெக் வாய் பகுதியின் முதல் வீவக வீடுகள் 1977ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. புதுப் பொலிவூட்டும் நகரங்களின் பட்டியலில் அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன் மற்றும் புக்கிட் மேராவைத் தொடர்ந்து ஆகக் கடைசியாக சுவா சூ காங் இணைந்து உள்ளது.

