சிங்கப்பூர் தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற போர்ஷே சொகுசு கார், ஜோகூரில் விளக்குக் கம்பம் மீது மோதியதில் அவர்களுக்குக் கைகளிலும் கால்களிலும் பல காயங்கள் ஏற்பட்டன என்று மலேசிய ஊடகம் தெரிவித்தது.
ஜோகூரின் பத்து பகாட்டிலிருந்து மெர்சிங்குக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசு வாகனங்கள் வரிசையில் அத்தம்பதியின் காரும் இடம்பெற்றிருந்தது. குளுவாங்கில் அந்தக் கார்கள் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது என்று ஓரியேன்டல் டெய்லி தெரிவித்தது.
வாகன ஓட்டுநருக்கு இடது கால் முறிவும் கைகால்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளதோடு, அவர் மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாகனத்தைத் திருப்ப முயன்றபோது அது சறுக்கி விளக்கு கம்பத்தில் மோதியதாகவும் இதனால் வாகனம் பலத்த சேதமடைந்ததாகவும் குளுவாங் தலைமைக் காவல்துறை அதிகாரி கூறினார்.
அந்த வாகனங்களின் வரிசையில் வந்த மற்ற வாகனங்கள் எதுவும் சேதமடையவில்லை. ‘இன்ஃபோரோட் பிளாக்’ ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்ட படங்களிலும் காணொளியிலும் வெள்ளை நிற போர்ஷே கார் ஒன்று முன்புறம் கடும்சேதமடைந்து காணப்பட்டது.
விபத்தில் காயமடைந்த தம்பதியர் தற்பொழுது பாதுகாப்பாக உள்ளதாக போர்ஷே பேச்சாளர் தெரிவித்தார்.