தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராப், டிரான்ஸ்-கேப் இணைப்பு தொடர்பான முதற்கட்ட ஆய்வு நிறைவு

2 mins read
07ed8273-2537-4e9a-ade4-0af41f6b853e
டிரான்ஸ்-கேப் வசம் ஏறக்குறைய 2,200 டாக்சிகளும் 300க்கும் மேற்பட்ட தனியார் வாடகை வாகனங்களும் உள்ளன. - படம்: எஸ்பிஹெச் மீடியா

டிரான்ஸ்-கேப் டாக்சி நிறுவனத்தை கிராப் நிறுவனம் வாங்க இருக்கும் உத்தேசத் திட்டம் குறித்த முதற்கட்ட மறுஆய்வை நிறைவு செய்துள்ளதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையம் (சிசிசிஎஸ்) திங்கட்கிழமை கூறியது.

சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய டாக்சி நிறுவனமான டிரான்ஸ்-கேப்பை இவ்வாண்டின் நான்காவது காலாண்டில் கிராப் வாங்க இருப்பதாக கடந்த ஜூலை 20ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இரு நிறுவனங்களும் அளித்த தகவல்களின் அடிப்படையிலும் டாக்சி தொழில்துறை மற்றும் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பால் போட்டி தொடர்பான கவலைகள் அதிகரிக்குமா இல்லையா என்பதை இப்போதே தன்னால் முடிவு செய்ய இயலவில்லை என்றது ஆணையம்.

இருப்பினும், இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து அது சில கவலைகளை வெளிப்படுத்தியது.

டிரான்ஸ்-கேப் நிறுவனத்தின் 2,200 டாக்சிகளையும் 300க்கும் மேற்பட்ட தனியார் வாடகை வாகனங்களையும் கையகப்படுத்த கிராப் விருப்பம் தெரிவித்து உள்ளது. அத்துடன் டிரான்ஸ்-கேப்பின் வாகனப் பட்டறை மற்றும் எண்ணெய் நிரப்பும் நடைமுறைகளையும் கிராப் கைப்பற்றக்கூடும்.

இது தொடர்பான முதற்கட்ட மறுஆய்வை ஆணையம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரம் கழித்து இந்த இணைப்பு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அது கருத்துகளைத் திரட்டத் தொடங்கியது.

போட்டி குறித்த கவலைகளைக் கையாள்வது தொடர்பான கடப்பாடுகளை இரு நிறுவனங்களும் வெளிப்படுத்தும் என்று ஆணையம் கூறியது.

கடுமையான போட்டிக்கு இடம் கொடுக்காமல் அதனைத் தடுப்பது அல்லது தணிப்பது, இணைப்பின் மூலம் எழும் பாதகமான விளைவுகளைச் சரிசெய்வது உள்ளிட்ட கடப்பாடுகள் அவற்றுள் அடங்கும் என்றும் அது குறிப்பிட்டது.

டிரான்ஸ்-கேப் கையகப்படுத்தப்பட்ட பிறகு மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்களுக்குப் பாதகமான நிலைமை ஏற்படாமலிருக்க பாதுகாப்பு நடைமுறைகளை ஆணையம் செயல்படுத்துமா என்று தொகுதியில்லா உறுப்பினர் லியோங் மன்வாய் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்