சிங்கப்பூரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைக் கொடுமைச் சம்பவங்கள் அல்லது குழந்தைகள் நலனை அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்ந்து 2022ஆம் ஆண்டிலும் அதிகமாகவே பதிவாகி உள்ளது.
முன்னதாக, 2019ஆம் அண்டு 1,000க்கும் மேற்பட்ட குழந்தைக் கொடுமைச் சம்பவங்கள் விசாரிக்கப்பட்ட வேளையில் ஈராண்டுகளில், 2021ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி ஏறக்குறைய 2,000 ஆனது. அது கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் மிகுந்திருந்த காலம்.
2022ஆம் ஆண்டின் குழந்தைக் கொடுமைச் சம்பவங்கள் 2,141 சம்பவங்கள் பதிவான 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தை பாதுகாப்புச் சேவைப் பிரிவின் மூத்த முதன்மை சமூகப் பணியாளர் யோகேஸ்வரி முனிசாமி கூறினார்.
எண்ணிக்கை அதிகரித்ததன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருப்பதாக அவர் சொன்னார். குறிப்பாக, குடும்ப வன்முறை பற்றி அதிகமானோர் விழிப்புணர்வு பெற்றிருப்பது, 2021ஆம் ஆண்டு தேசிய அளவிலான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உதவி அழைப்பு எண் தொடங்கப்பட்டது ஆகியன முக்கிய காரணங்கள் என்றார் அவர்.
அதிக விழிப்புணர்வு பெற்றதன் மூலம் அதிகமானோர் கொடுமை அல்லது துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றி புகார் செய்வதே எண்ணிக்கை அதிகரிப்புக்கான அடிப்படை காரணம்.
கொள்ளைநோய் பரவல் காலத்தில் அதிக மனஉளைச்சல் ஏற்பட்டதும் குழந்தைக் கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம்.
அந்த சமயத்தில் ஏற்பட்ட வேலை இழப்பு, வீட்டிலிருந்து வேலை செய்தவாறே பிள்ளைகளைப் பராமரித்தது போன்றவற்றால் மனஉளைச்சல் அதிகரித்திருக்கலாம்.
மேலும், குழந்தை என்ற வரையறையில் வயது கூட்டப்பட்டு இருப்பதாகவும் திருவாட்டி யோகேஸ்வரி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னர் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே குழந்தைகளாகக் கருதப்பட்டனர். ஆனால், 2020 ஜூலையில் குழந்தை மற்றும் இளையோர் சட்டம் திருத்தப்பட்டபோது 16 வயதிலிருந்து 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வரை குழந்தை என வரையறுக்கப்பட்டது.
அன்புக்குரியவர்களால் மரணம் விளைவிக்கும் அளவுக்கு குழந்தைகளைக் கொடுமை செய்வது அதிகரிக்கவில்லை என்று அக்டோபர் 3ஆம் தேதி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் தொடர்பான தகவல்களை பல்வேறு அமைப்புகளுடன் பரிமாறிக்கொள்ளும் வகையில் அரசாங்க நெறிமுறை 2020 நவம்பர் முதல் மேலும் வலுவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உமைசியா என்னும் இரு வயதுக் குழந்தையை அவரது தந்தையும் அந்த ஆடவரின் மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவத்தில் ஆடவருக்கு 21½ ஆண்டு சிறையும் 18 பிரம்படிகளும் செப்டம்பரில் விதிக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிகாட்டி ராடின் மாஸ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மெல்வின் யோங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது திரு மசகோஸ் இந்த விவரங்களை வெளியிட்டார்.