சவூதி அரேபியா, யுஏஇக்கு பிரதமர் லீ அதிகாரத்துவப் பயணம்

2 mins read
0258b4fd-b7cc-4219-8bf9-089356cf0f3c
பிரதமர் லீ சியன் லூங், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரியாத்: பிரதமர் லீ சியன் லூங், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

சவூதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் அல் சவுத், யுஏஇ அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ஸய்யித் அல் நஹ்யான் இருவரின் அழைப்பை ஏற்று பிரதமர் லீயின் பயணம் அமைகிறது.

சவூதித் தலைநகர் ரியாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ பங்கேற்பார். உறவுகளை வலுப்படுத்தி, புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆசியான், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்தாலோசிப்பர்.

சவூதியும் யுஏஇயும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உறுப்பு நாடுகளாக உள்ளன. பஹ்ரேன், குவைத், ஓமான், கத்தார் ஆகியவை இதர உறுப்பு நாடுகள்.

சவூதியில் பட்டத்து இளவரசர் முகம்மதையும் சவூதித் தலைவர்களையும் பிரதமர் லீ சந்தித்துப் பேசுவார். சவூதியின் ‘விஷன் 2030’ திட்டம் குறித்து பிரதமர் லீக்கு விளக்கப்படும். வரவேற்பு நிகழ்வு ஒன்றில், சவூதியில் வசிக்கும் சிங்கப்பூரர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

ரியாத்துடன் சேர்த்து மதினா, அல் உலா நகர்களில் உள்ள வரலாற்று, கலாசாரத் தளங்களுக்குப் பிரதமர் லீ செல்வார்.

யுஏஇ தலைநகர் அபுதாபியில் அதிபர் ஷேக் முகம்மதையும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித்தையும் பிரதமர் லீ சந்தித்துப் பேசுவார்.

யுஏஇயின் எரிசக்தி உருமாற்றத் திட்டங்கள் குறித்து அறிய அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் பிரதமர் லீ செல்வார்.

குறிப்புச் சொற்கள்