செப்டம்பரில் ஏற்றுமதிச் சரிவு தணிந்துள்ளது

செப்டம்பரில் ஏற்றுமதிச் சரிவு தணிந்துள்ளது

1 mins read
652640c9-e6ca-428f-8ed7-f61713e263d8
எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 13.2 விழுக்காடு குறைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்டம்பரில், தொடர்ந்து 12வது மாதமாக சிங்கப்பூரின் ஏற்றுமதி விகிதம் சரிவடைந்தது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தைவிட அது மேம்பட்டிருந்தது.

எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி செப்டம்பரில் 13.2 விழுக்காடு குறைந்தது. ஆகஸ்ட் மாதம் அது 22.5 விழுக்காடாகப் பதிவானது.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (அக். 17) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் மாத ஏற்றுமதிச் சரிவு எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவு என்று கூறப்பட்டது.

அது 14.7 விழுக்காடாக இருக்குமென்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.

புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட வல்லுநர்கள் 15 விழுக்காடாக இருக்குமென்று கூறியிருந்தனர்.

செப்டம்பரில் மொத்த ஏற்றுமதி 11.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஆகஸ்ட்டில் அது 6.6 விழுக்காடு சரிந்தது.

செப்டம்பர் மாதம் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி குறைந்ததற்கு மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்ததே முக்கிய காரணம்.

மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 31.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாத மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 11.6 விழுக்காடு குறைந்தது.

இந்த ஆண்டு இறுதிக்கும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்துக்கும் இடையில் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி சீரடையும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு முழுமைக்குமான எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில், 11 விழுக்காடு குறைவாகப் பதிவாகுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்