மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான லெய்கா மைக்ரோசிஸ்டம்ஸ் US60 மில்லியன் (S$82.1 மில்லியன்) மதிப்பிலான புதிய உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூடத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது.
ஜூரோங்கில் 20,600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அந்தக் கூடம் மருத்துவத்திற்கும் தொழிற்கூடங்களுக்கும் தேவைப்படும் நுண்ணோக்கிகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அந்நிறுவனம், தனது மொத்த வருவாயில் 40 விழுக்காட்டை இதற்கு ஒதுக்க உள்ளது.
மேலும் அறுவைச் சிகிச்சைக்கான தனது நுண்ணோக்கிகளின் உலக உற்பத்தியை இரட்டிப்பாக்கவும் அந்நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
தற்போது இந்த உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கூடத்தில் 480 ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி நிர்வாகம் மற்றும் தர உத்தரவாதப் பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை 500ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன.
சிங்கப்பூரில் திறக்கப்பட்டு இருப்பது அதன் நான்காவது கூடம்.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற இந்தப் புதிய கூடத்தின் திறப்பு நிகழ்வில் பங்கேற்று லெய்கா மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனெட் ரின்க் உரையாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கிகளைத் தயாரிப்பது போன்ற பல மருத்துவத் திட்டங்கள் புதிய கூடத்தில் உருவாக்கப்படும் என்றார்.
மேலும், நவீன உற்பத்திமுறைகளையும் உற்பத்திக்கான புத்தாக்கங்களையும் இந்தக் கூடம் ஒன்றுதிரட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் அமைந்துள்ள லெய்கா மைக்ரோசிஸ்டம்ஸ் கிளைகளில் 3,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மேலும் 20 விற்பனை மற்றும் சேவை அலுவலகங்களை இது இயக்குகிறது.
அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கிகள், ஊடுகதிர் வரைவு முறை உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிப்பது இதன் முதன்மை வர்த்தகமாகும்.

