தேக்கா நிலையத்தில் மேசையிலிருந்து கண்ணாடிக் குவளையையும் குளிர்பான டின்னையும் அப்புறப்படுத்தத் தவறிய வாடிக்கையாளர் ஒருவருக்கு தேசிய சுற்றுப்புற வாரிய அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேசையைத் துப்புரவு செய்யுமாறு கூறிய அதிகாரிகள் இருவரை வாடிக்கையாளர் ஒருவர் எதிர்கொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது 320,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேசையைத் துப்புரவு செய்ய சொன்ன அதிகாரிகளிடம் அந்த வாடிக்கையாளர் விளக்கம் கேட்டார். உணவருந்தும்போது மேசை அசுத்தமானால் அதைத் துப்புரவு செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைத்தனர்.
மேசையிலிருந்து தட்டுகளை அப்புறப்படுத்துவதோடு, மேசையையும் துப்புரவு செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமா என்பது குறித்தும் இணையத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இணையத்தில் அந்தக் காணொளி வலம் வருவது பற்றி தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டது. அடுத்தவர் உண்பதற்கு ஏதுவாக மேசையைத் துப்புரவாக வைத்திருக்கும்படி வாடிக்கையாளர்களை அது கேட்டுக்கொண்டது.
“பயன்படுத்திய பிறகு மேசையைத் துடைக்கத் தேவையில்லை என்றபோதிலும், மேசையிலோ அதைச் சுற்றியோ குப்பையைப் போடக்கூடாது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நினைவுறுத்துகிறோம்,” என்று வாரியம் விளக்கியது.


