உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளில் இயங்கி வரும் இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பு ஆண்களாலேயே வழிநடத்தப்பட்டு வரும் நிலையில், 21 ஆண்டுகளாக இயங்கி வரும் சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பு (கோபியோ சிங்கப்பூர்) முதன்முறையாகப் பெண்கள் பிரிவைத் தொடங்க உள்ளது.
வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த திறமையான 12 பெண்கள் இணைந்து வழிநடத்தவிருக்கும் இப்பிரிவின் தொடக்க விழா வரும் அக்டோபர் 28 ஆம் நாள் ‘பெனின்சுலா எக்ஸ்செல்சியர்’ ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இப்பிரிவின் செயற்குழு உறுப்பினராக உள்ள கோமதி ஜெயகுமார், “பலதரப்பட்ட கருத்தியலும், சிந்தனைகளும் ஒன்றிணைய உள்ள இந்த பெண்கள் பிரிவு, இந்திய வம்சாவளிப் பெண்களை பின்னிழுக்கும் சக்திகளை தகர்த்தெறியவும், விழிப்புணர்வூட்டி பெண்களை மென்மேலும் முன்னேற உந்தித்தள்ளவும் உதவும் நோக்கம் கொண்டுள்ளது” என்கிறார்.
லிஷா உள்ளிட்ட பல்வேறு இந்திய அமைப்பில் பணியாற்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக கோபியோவில் பங்காற்றும் திருவாட்டி சந்திரிகா, தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலரது முன்னெடுப்பால் உருவான இந்தப் பெண்கள் பிரிவு, எதிர்காலத்தில் பல பெண்களை உறுப்பினர்களாக்குவதோடு, பெண்களின் உடல்நலம், மனநலம் உள்ளிட்ட பல விழிப்புணர்வுக் கலந்தாய்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த பெண் சமூக நலத்தின்பால் அக்கறையோடு தொடங்கப்பட்டுள்ள இப்பிரிவின் தொடக்க விழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் அனைத்துலக உணவுவகைகளைச் சுவைக்கலாம். அத்துடன், பெண்களை முன்னிறுத்தி வழங்கப்படும் பரிசுகளையும் அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டிகள் மூலம் பல பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
பல்வேறு இந்திய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கும் இவ்விழாவில் நடனம், இசை என பெண்களால் நடத்தப்படும் பல கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
$100 நுழைவுச்சீட்டுகளைப் பெற சந்திரிகா - 91087503, உமா - 82318923 இருவரையும் தொடர்புகொள்ளலாம்.