இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த மைக்ரோசாப்ட், கூகலுடன் ஒப்பந்தம்

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த மைக்ரோசாப்ட், கூகலுடன் ஒப்பந்தம்

2 mins read
8af84619-26fa-4ece-a31d-0230ac378ef7
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை மைக்ரோசாப்ட், கூகல் நிறுவனங்களுடன் தனித்தனி ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை மைக்ரோசாப்ட், கூகல் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

மரீனா பே சாண்ட்ஸ் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்தில் ‘சிங்கப்பூர்- அனைத்துலக இணையப் பாதுகாப்பு வாரம்’ நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்ச்சியின் தொடக்க உரையில் பேசியபோது அந்தத் தகவலை வெளியிட்டார் திரு ஹெங்.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை இரு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தனித்தனி ஒப்பந்தங்களை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இணைய அச்சுறுத்தல் குறித்த தகவல் பகிர்வு; இணையக்குற்றங்கள், தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகள் போன்றவற்றைக் கூட்டாக இணைந்து கையாள்வது; செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, மேலும் திறனை வளர்க்கும் முயற்சிகள் போன்றவை ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.

அரசாங்கம், தொழில்நுட்ப நிறுவனங்கள், பல தரப்பு பங்காளி அமைப்புகள் இணைந்து தான் ஒரு பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கமுடியும் என்றும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய இணையச் சேவைகளை வழங்கும்போது அவை நன்கு சோதிக்கப்பட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதனால் அந்த சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும் திரு ஹெங் கூறினார்.

இணையப் பாதுகாப்புக்கான தேவைகள் அதிகமானதால் சிங்கப்பூர் புதிதாக ஒரு தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

அந்தப் பயிற்சி திட்டத்தில் அனைத்து நாடுகளும் கலந்துகொள்ளமுடியும் என்றும் அதில் இணையப் பாதுகாப்பு குறித்த அனைத்துவிதமான பாடச் சேவைகளும் இருக்கும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

முதல் பயிற்சி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்