40 இல்லப் பணிப்பெண்களுக்கு வட்டிக்குப் பணம்: ஆடவர் கைது

1 mins read
381847a8-bfc8-453b-a93d-c5d42c4db161
குறைந்தபட்சம் 40 இல்லப் பணிப்பெண்களுக்குச் சட்டவிரோதமாக வட்டிக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவதன் பேரில் ஆடவர் கைதானார். - படம்: எஸ்டி

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இல்லப் பணிப் பெண்களில் குறைந்தபட்சம் 40 பேருக்குச் சட்டவிரோதமாக பணம் கடன்கொடுத்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் 45 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.

அந்த ஆடவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதாக அக்டோபர் 3ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதற்கு மூன்று நாள்கள் கழித்து அவர் கைதானார்.

அவரிடம் இருந்து கைப்பேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் சட்ட விரோத முறையில் நடந்ததாகக் கூறப்படுவது பற்றிய விவரங்கள் கைப்பேசியில் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்,

அந்த ஆடவர் குறைந்தபட்சம் 40 இல்லப் பணிப்பெண்களுக்குக் கடன் கொடுத்து இருக்கிறார் என்பது முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் புலன்விசாரணை நடப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் வட்டிக்குப் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு வோருக்கு முதல் முறை குற்றம் செய்து இருந்தால் $300,000 வரை அபராதம் விதிக்க முடியும்.

நான்கு ஆண்டுகள் வரை சிறை, ஆறு பிரம்படிகள் வரை கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

அதேபோல் சட்டவிரோத கடன் வழங்குநர்களிடமிருந்து பணம் கடன் வாங்கும் ஒர்க் பர்மிட் ஊழியர்களின் வேலை அனுமதி ரத்தாகிவிடும் ஆபத்தும் உள்ளது.

அத்தகைய ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியாதபடி அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்