மோட்டார்சைக்கிளோட்டியின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த 38 வயது மாது, கனரக வாகனம் ஒன்றுடன் அந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் மாண்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
புக்கிட் பாத்தோக் ரோட்டை நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் விபத்து ஏற்பட்டிருப்பதாக புதன்கிழமை காலை 7.40 மணிக்குக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 38 வயது ஆடவர், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை அடுத்து நான்கு மணிநேரத்திற்குப் பிறகும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்வதாக வாகனமோட்டிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
காவல் துறையினர் இவ்விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.