சிங்கப்பூரில் அரசு நிதி பெறும் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கும் சிங்கப்பூரர்கள் தவிர இதர மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
கல்விக் கட்டண உயர்வு, 2024 முதல் 2026 வரை கட்டம் கட்டமாகக்கூடும். நிரந்தரவாசிகள், அனைத்துலக மாணவர்கள் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
கல்வி அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கைவழி இதனைத் தெரிவித்தது.
கல்வி நிலையைப் பொறுத்து நிரந்தரவாசிகள் செலுத்த வேண்டிய மாதக் கல்விக் கட்டணம் ஒவ்வோர் ஆண்டும் $25 முதல் $60 வரை அதிகரிக்கும்.
அதேபோல் அனைத்துலக மாணவர்களுக்கான கட்டணம் ஆண்டுதோறும் $25 முதல் $140 வரை கூடும்.
கட்டண உயர்வு, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடப்புக்கு வரும்.
இதனிடையே, இதுபற்றி கருத்து தெரிவித்த கல்வி அமைச்சு, வழக்கமாக இடம்பெறக்கூடிய பள்ளிக் கட்டண மாற்றத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுவதாகக் கூறியது.
பெற்றோர் திட்டமிட ஏதுவாக முன்னதாகவே இதை அறிவிப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்களுக்கான கட்டணத்தில் மாற்றம் இராது.
தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிங்கப்பூரர்கள் மாதாந்திரக் கட்டணம் செலுத்த வேண்டாம். உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மாதாந்திரக் கல்விக் கட்டணம் $5. புகுமுக வகுப்பு கல்விக் கட்டணம் $6 ஆக இருக்கிறது.
சிங்கப்பூரர்கள் தவிர மற்றவர்களுக்கான பள்ளிக்கூட கல்விக் கட்டணம் கடந்த சில ஆண்டுகளாகவே சீராக அதிகரித்து வந்துள்ளது.

