சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அக்டோபர் முதல் இரண்டு வாரங்களில் குறைந்துள்ளது.
அந்த எண்ணிக்கை. செப்டம்பரில் 300ஐத் தாண்டியது. அக்டோபர் 1ஆம் தேதிக்கும் 7ஆம் தேதிக்கும் இடையில் 266 பேர் பாதிக்கப்பட்டனர்.
அக்டோபர் 8ஆம் தேதிக்கும் சென்ற சனிக்கிழமைக்கும் இடையில் 215 பேரை டெங்கி தொற்றியது என்பது தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தள புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் 98 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைக் கணக்கிட்டுப் பார்க்கையில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 7,884 பேரை டெங்கி தொற்றியது.
திங்கட்கிழமை நிலவரப்படி 53 டெங்கி கொசு தொற்று இடங்கள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் 10 இடங்கள் சிவப்பு நிலை என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதாவது அந்த இடங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 10 அல்லது அதற்கும் மேற்பட்டோர் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சைனாடவுனில் உள்ள கிளப் ஸ்திரீட், அங் மோ கியோவில் உள்ள லெண்டோர் லூப், சிராங்கூன் கார்டனில் உள்ள கார்டிஃப் குரோவ் ஆகிய இடங்களில் தொற்று தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மே முதல் அக்டோபர் வரைப்பட்ட காலத்தில் பொதுவாக டெங்கி தொற்று அதிகமாக இருக்கும் என்று வாரியம் தெரிவித்தது.
பருவநிலை காரணமாக வரும் மாதங்களிலும் நிலைமை மோசமாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அது எச்சரித்தது.

