தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் செலவு விவரங்களை மக்கள் இணையத்தில் பார்வையிடலாம்

2 mins read
5fd7aa94-a46d-4765-894f-a93f5166d436
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: சிங்கப்பூர் ஊடகம்

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

தேர்தல் செலவுகளும் வேட்பாளர்கள் சமர்ப்பித்த பிரசார நிதி பற்றிய விவரங்களும் மக்களின் பார்வைக்காக இணையத்தில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வரை இந்த விவரங்களை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

அப்படி பார்வையிட விரும்புவோர் ‘சிங்பாஸ்’ செயலி உதவியுடன் மின்னிலக்க சேவையில் நுழையலாம் என்று நேற்று அறிக்கை ஒன்றில் தேர்தல் துறை தெரிவித்தது.

2023ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் மூன்று பேர் போட்டியிட்டனர். புதிய அதிபராக பதவியேற்ற தர்மன் சண்முகரத்னம், முன்னாள் ஜிஐசி முதலீட்டுப் பிரிவின் தலைவர் இங் கொக் சோங், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான் ஆகியோர் அவர்கள்.

அதிபர் தேர்தல் சட்டத்தின்படி அனைத்து வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் வேட்பாளர்களின் பிரசார நிதியை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசிதழில் தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 31 நாள்களுக்குள் அதனைச் செய்ய வேண்டும்.

“தேர்தல் செலவுகளும் பிரசார நிதிகளும் ஒவ்வொரு வேட்பாளர்களும் வெளிப்படையாக நடந்துகொள்வதை உறுதி செய்கிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் $812,822.10 வரை தேர்தல் செலவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இது, அதிபர் தேர்தல் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை அடிப்படையாகக் கொண்டது.

2017ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் $220,875 வெள்ளி செலவழித்தார். அவற்றின் பெரும்பாலான தொகை பிரபலப்படுத்துவதற்காக செலவிடப்பட்டது.

தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள் தவிர தொண்டூழியர்களுக்கு உணவு, பானங்கள், தளவாடங்கள் ஆகியவற்றுக்கும் பணத்தை செலவிட முடியும். சமூக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பதை வேட்பாளர்கள் தெரிந்துகொள்வதற்கான பயிற்சி, ஆலோசனைகளுக்கும் பணத்தைச் செலவிடலாம்.

குறிப்புச் சொற்கள்