ஆசியாவிலேயே தலைசிறந்த ஓய்வூதிய முறை சிங்கப்பூரின் மசே நிதி

2 mins read
3e611c8c-7516-4886-95a3-09dd06596264
ஆசியாவிலேயே தலைசிறந்த ஓய்வூதிய முறை சிங்கப்பூரின் மத்திய சேம நிதி என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகிலேயே தலைசிறந்த 10 ஓய்வூதிய முறைகளில் ஒரே ஓர் ஆசிய நாடாக சிங்கப்பூர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. - படம்: எஸ்டி கோப்புப்படம் 

சிங்கப்பூரின் மத்திய சேம நிதி ஏற்பாடு ஆசியாவிலேயே முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகளாவிய அட்டவணை மூலம் இது தெரியவருகிறது.

மெர்சர் சிஎஃப்ஏ உலக ஓய்வூதியக் கழகம் இத்துடன் 15வது அட்டவணையை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, உலக அளவில் தலைசிறந்த 10 ஓய்வூதியத் திட்டங்களில் ஆசியாவைச் சேர்ந்த ஒரே ஒரு திட்டம் சிங்கப்பூரின் மத்திய சேம நிதி ஏற்பாடுதான்.

ஓய்வூதியங்களை மதிப்பிடுவதில் வல்லமைமிக்க நிறுவனமான மெர்சர் 2023ல் உலகம் முழுவதையும் சேர்ந்த 47 ஓய்வூதிய திட்டங்களை அலசி ஆராய்ந்தது. அவற்றில் சிங்கப்பூரின் மத்திய சேம நிதி முறை இரண்டு நிலைகள் மேம்பட்டு ஏழாவது இடத்தைப் பிடித்தது.

மத்திய சேம நிதி ஏற்பாடு 2022ல் மொத்தம் 44 ஓய்வூதிய முறைகளில் ஒன்பதாவது தலைசிறந்த முறையாக இருந்தது.

மெர்சர், சிஎஃப்ஏ ஓய்வூதியக் கழகம் வெளியிட்டு இருக்கும் ஆண்டு அறிக்கை இந்த ஆண்டில் உலக மக்கள்தொகையில் 64 விழுக்காட்டை உள்ளடக்குகிறது.

ஆசியாவிலேயே முதலிடம் சிங்கப்பூருக்கு கிடைத்து இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங்கும் ஜப்பானும் இருக்கின்றன.

சிங்கப்பூர் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் (76.3) மேம்பட்டு இருக்கிறது. அது ‘பி+’ தரத்தை முதல்முதலாக எட்டி இருக்கிறது.

சிங்கப்பூரின் மத்திய சேம நிதி ஏற்பாடு அதிக ஓய்வூதிய பாதுகாப்பை அளிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று மெர்சர் சிங்கப்பூர் அமைப்பின் சொத்துத் தொழில் துறை தலைவர் சோங் சீ லூங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த 2022ல் சிங்கப்பூர் பெற்ற மதிப்பெண் 74.1. அது ‘பி’ தர நிலையில் இருந்தது.

இந்த வருடாந்திர உலகளாவிய ஓய்வூதிய அட்டவணை முதல்முதலாக 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதலே சிங்கப்பூர் தொடர்ந்து சீராக முன்னேறி வருகிறது.

இந்த ஆண்டின் ஆகக் கடைசியான இரண்டாவது காலாண்டுக்கான மசே நிதிக் கழகத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், சேம நிதி உறுப்பினர்கள் மொத்தம் சுமார் $556.5 பில்லியன் தொகையை கணக்கில் வைத்து இருந்தார்கள்.

இந்த அளவு, சென்ற ஆண்டைவிட 2 விழுக்காடு அதிகம்.

ஓய்வூதியக் கணக்கில் உறுப்பினர்கள் வைத்திருந்த தொகை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.6% கூடி இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $105.5 பில்லியனாக அதிகரித்தது.

குறைந்த பிறப்பு விகிதம், நீண்ட ஆயுள் ஆகியவை பல சமூகங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று மெர்சர் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

மக்களின் ஆயுள் கூடுவதால் அவர்களின் நீண்ட ஓய்வு காலத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை ஓய்வூதிய வருமான முறைகளுக்கு ஏற்படுகிறது.

சிங்கப்பூரின் மசே நிதியில் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய சேமிப்பை உறுப்பினர்கள் எடுத்துக்கொள்வதற்கான வயதை 55லிருந்து 60ஆக சேம நிதி உயர்த்தலாம் என்று திரு சோங் யோசனை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதி