பிள்ளைகளுடன் கூடிய குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மேலும் அரசாங்க ஆதரவு கிடைக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
அவர்கள் சொந்த வீடு வாங்க ஏதுவாக சேமிக்க உதவுவது, வேலையில் தொடர்ந்து இருந்துவர உதவுவது ஆகியவை அந்த ஆதரவுகளில் உள்ளடங்கும்.
சிங்கப்பூரில் எந்த ஒரு குடும்பமும் அடித்தட்டு நிலையிலேயே நிரிந்தரமாக சிக்கிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தவே அத்தகைய குடும்பங்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சமூகத் தொடர்பு (கம்லிங்க்) செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ள அதிக மானிய பொது வாடகை வீடு ஏற்பாட்டில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்கும் என்று திரு வோங் கூறினார்.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் அவற்றின் குடும்ப வழிகாட்டிகளுக்கும் இடையில் கூட்டாக உருவாக்கப்படும் செயல்திட்டங்கள் மூலம் இந்தக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.
சமூகத் தொடர்பு செயல்திட்ட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை குடும்ப வழிகாட்டிகளாக அரசாங்கம் உருவாக்கும்.
அந்த வழிகாட்டிகள், குறைந்த வருமானக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஊக்கமூட்டி அவற்றுடன் அணுக்கமாக சேர்ந்து செயல்பட்டு அத்தகைய குடும்பத்தின் இலக்கு நிறைவேற உதவுவார்கள்.
தொடர்ந்து வேலை பார்ப்பது, சொந்த வீடு வாங்க சேமிப்பது, பிள்ளைகள் வழக்கமாக பாலர்பள்ளிக்குச் சென்றுவருவதை உறுதிப்படுத்துவது போன்றவற்றில் முன்னேற்றத்தைச் சாதிக்கின்ற குடும்பங்களுக்கு அதிக நிதி ஆதரவு அல்லது நீண்டகால ஆதரவு குறித்து பரிசீலிக்கலாம் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமானக் குடும்பங்கள் தங்கள் நீண்ட கால இலக்குகளை நோக்கி முன்னேறும்போது அவை சந்திக்கும் குறுகிய கால நிதி நெருக்கடியைத் தீர்த்து வைக்க இந்தக் கூடுதல் உதவி கைகொடுக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் நிதி உதவித் திட்டங்களை நிர்வகிக்கும் சமூகச் சேவை அலுவலகத்தின் 10வது ஆண்டுவிழாவில் துணைப் பிரதமர் உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சி கிரேத்தா ஆயர் சமூக நிலையத்தில் நடந்தது.
அந்த அலுவலகங்கள், தேவை உள்ள குடும்பங்களுக்கு உதவும் முன்கள அலுவலகமாகவும் செயல்படுகின்றன.
அத்தகைய அலுவலகங்களின் எண்ணிக்கை கடந்த 2013ல் வெறும் இரண்டுதான்.
இப்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகள் அனைத்திலும் 24 அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அவை பரந்த அளவில், வசதியாக, ஒருங்கிணைந்து சமூக ஆதரவை வழங்குகின்றன என்று திரு வோங் தெரிவித்தார்.
முன்பெல்லாம் முதியோர்தான் வாடகை வீடுகளில் வசிப்பார்கள். ஆனால் இப்போது இளம் பிள்ளைகளுடன் கூடிய அதிக குடும்பங்கள் வாடகை வீடுகளில் அதிக காலம் வசிக்கின்றன என்பதை திரு வோங் சுட்டினார்.
இந்த விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வருமான ஏற்றத்தாழ்வு, சமூக முன்னேற்றம் ஆகிய பிரச்சினைகளைச் சமாளிக்க பல அமைப்புகளை அரசாங்கம் ஈடுபடுத்தி வருகிறது.
முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின் ஒரு பகுதியாக அது இவ்வாறு செய்து வருகிறது. அதாவது மேலும் பலவற்றைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது.
இருந்தாலும் அத்தகைய குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இதைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின்கீழ் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் இதர வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த திரு வோங், இந்த முயற்சியில் ஈடுபடும்படி பொதுமக்களையும் நிறுவனங்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.