உலகம் முழுவதும் 2022 ஆகஸ்டுக்கும் 2023 ஆகஸ்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மோசடிகளில் 1.02 டிரில்லியன் டாலர் சூறையாடப்பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூரர்கள் சராசரியாக அதிக தொகையை இழந்துள்ளனர்.
2021ல் மோசடிகளில் இழந்த 55.3 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் தற்போதைய தொகை மிக அதிகம்.
2020ஆம் ஆண்டில் அது 47.8 பில்லியன் டாலராக இருந்தது.
‘காசா’ எனும் மோசடிக்கு எதிரான லாப நோக்கற்ற அமைப்பு ஆய்வில் இந்த விவரங்களைக் கண்டுபிடித்துள்ளது.
புதன்கிழமை போர்ச்சுகலின் லிஸ்பனில் நடைபெற்ற உலகளாவிய மோசடிக்கு எதிரான உச்சநிலை மாநாட்டில் பேசிய ‘காசா’வின் நிர்வாக இயக்குநர் ஜோரிஜ் ஆப்ரஹாம் ஆய்வின் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
ஆண்டுக்கு ஆண்டு இந்த மாநாடு இரண்டு நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
சிங்கப்பூர் உட்பட 43 நாடுகளைச் சேர்ந்த 49,459 தனிப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மோசடிக்காரர்களிடம் இழக்கப்பட்ட தொகை மதிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
எத்தகைய மோசடியை எதிர்கொண்டீர்கள், எவ்வளவு தொகையை இழந்தீர்கள் போன்ற கேள்விகள் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது. பின்னர் அதில் கிடைத்த தரவுகள், நாட்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மோசடிகளில் இழக்கப்பட்ட தொகை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு ஆப்ரஹாம், இதற்கு முன்பு அமலாக்கப்பட்ட அமைப்புகளிடமிருந்து பெற்ற புள்ளி விவரங்களை வைத்துக் கணக்கிடப்பட்டது என்றார்.
அதற்கு சில வரம்புகள் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழு விழுக்காடு மோசடிகள் மட்டுமே சட்ட அமலாக்க அமைப்புகள் அல்லது அரசாங்கங்களுக்குத் தெரிய வருகிறது. இது மிகவும் சிறிய எண்ணிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சராசரியாக 4,031 டாலர் இழந்துள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, 3,767 யுஎஸ் டாலருடன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்டிரியா 3,484 யுஎஸ் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளது. வசதியான இந்த மூன்று நாடுகளையும் மோசடிக்காரர்கள் குறி வைக்கின்றனர் என்று திரு ஆப்ரஹாம் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூர் காவல் படை வெளியிட்ட அறிக்கையில் 2022ஆம் ஆண்டில் மோசடிகளில் 660.7 மில்லியன் வெள்ளியை சிங்கப்பூர் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது, 2021ஆம் ஆண்டில் இழக்கப்பட்ட $632 மில்லியனுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

