வாடகைக் கார் நிறுவனமான கோஜெக் அதன் வாகன ஓட்டுநர்களிடம் பெறும் கழிவுத் தொகையை அல்லது சேவைக் கட்டணத்தை நவம்பர் 1 முதல் 2024 இறுதி வரை குறைத்துக் கொள்ளும்.
ஒவ்வொரு பயணத்துக்கும் அந்தத் தொகை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
வழிநில்லா போக்குவரத்துத் துறை இப்போது பல நெருக்கடிகளைச் சந்திக்கிறது. அதன் காரணமாக கட்டணம் கூடி இருக்கிறது. காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கிறது.
இதைச் சமாளிக்கும் வகையில் கழிவுத்தொகையைக் குறைத்துக்கொள்ளப் போவதாக கோஜெக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
வாடகைக் கார் சேவைகளுக்கான தேவை கூடுகிறது. ஓட்டுநர்களுக்கு நடைமுறைச் செலவு அதிகரிக்கிறது.
இதன் காரணமாகவே சேவைக் கட்டணத்தை தான் குறைத்துக்கொள்வதாக கோஜெக் வியாழக்கிழமை தெரிவித்தது.
சேவைக் கட்டணத்தைக் குறைப்பதால் வாகன ஓட்டுநர்கள் வீட்டுக்குக் கொஞ்சம் அதிகத் தொகையை எடுத்துச் செல்லலாம்.
அதேவேளையில், கோஜெக்கின் சேவைகள் தொடர்ந்து நம்பகத்தன்மையுடன் திகழும். சேவையை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையிலும் அது இருக்கும் என்று கோஜெக் சிங்கப்பூர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கோஜெக் நிறுவனம் நவம்பர் 1 முதல் ரொக்கமில்லா வகையில் கட்டணத்தைச் செலுத்துகின்ற பயணிகளுக்கு 10 காசு முதல் 60 காசு வரைப்பட்ட பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கும்.
இத்தகைய கட்டணத்தை இப்போதுதான் முதன்முதலாக கோஜெக் அறிமுகப்படுத்துகிறது.
இது இந்தத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறைதான் என்று கூறிய அந்த நிறுவனம், பயணத் தொலைவைப் பொறுத்து அந்தக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறியது.
‘‘இதனால் உங்களுடைய ஒட்டுமொத்த வருவாய் பாதிக்காது,’’ என்று இந்த நிறுவனம் அதனுடைய வாகன ஓட்டுநர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது.