சிங்கப்பூர்: கடந்த 2022ன் பிற்பாதியில் உற்பத்தித் துறையின் துணைப்பிரிவான உணவு, பானத் துறையில்தான் அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்பும் பெரிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.
மனிதவள அமைச்சு வெளியிட்ட வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அறிக்கையில் உற்பத்தித் துறையில் நடந்த 65 விபத்துகளில், 26 விபத்துகள் உணவு மற்றும் பானத் துறையில் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதே அறிக்கை, 2023ம் ஆண்டின் முதற்பாதியில் நடந்த இதுபோன்ற 325 விபத்துகளில், 88 விபத்துகள் உற்பத்தித் துறையிலேயே நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
அந்த 88 விபத்துகளில் 18 சம்பவங்கள் உணவு மற்றும் பானத்துறை சார்ந்தவை. இந்த எண்ணிக்கை, 38 விபத்துகளை பதிவுசெய்துள்ள இரும்புத் தொழில்துறைக்கு அடுத்து 2வது நிலையில் உள்ளது. இவ்விரு துறைகளும் உற்பத்தித் துறையின் துணைப் பிரிவுகளாகும்.
வேலையிட விபத்துகளுக்கு காரணங்களாக இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள், சறுக்கி விழுதல், தடுக்கி விழுதல், கீழே விழுதல், அதிக வெப்பத்தால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றை வியாழனன்று (அக்.19) மனிதவள அமைச்சு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது.
2023ம் ஆண்டின் முதற்பாதியில் அமைச்சு 450க்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்தியதில் பாதுகாப்புக்கு எதிராக 1045 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
தண்டனையாக உடனடியாக வேலையை நிறுத்தும் ஆணை ஒன்றும் வழங்கப்பட்டது. மொத்தம் $31,300 வரையான 21 அபாராதங்களும் 1,021 எச்சரிக்கை ஆணைகளும் குற்றம் புரிந்த நிறுவனங்களுக்கு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து விளைவிக்கக்கூடிய இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அரண்கள், வேலையிடங்களில் உள்ள நடைபாதைகளில் விழாமல் பிடித்துக்கொள்ளும் கைப்பிடிகள் என பற்பல அடிப்படை வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று அறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்தின் இயக்குநர் செபாஸ்டியன் டான், பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாமல் போவதால், ஊழியர்களுக்கு பெரும் காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.
அக்டோபர் மாதம் முதல் , வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்ய, குறைபாட்டு புள்ளி விவரத் திட்டத்தை அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. விரிவாக்கப்படும் அத்திட்டத்தின்படி, பாதுகாப்புக் குற்றங்கள் புரியும் நிறுவனங்கள் குறைபாட்டு புள்ளிக் கணக்கை எட்டியபின் தற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் வரை, வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த அனுமதிக்கப்படாது.
முறையாக காலணிகள் அணியாமல் இருப்பதும் பணியிட விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. தேசிய பணியிடம் மற்றும் சுகாதார புள்ளி விவரங்களின்படி, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 14 உயிரிழப்புகளும் 311 பெரிய காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
பாதுகாப்பு மீறல்களில் ஈடுபடும் பொறுப்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சு தயங்காது என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பில் முதன்மை கவனம் செலுத்தி, வேலையிட விபத்துகளை முற்றிலும் தடுத்து அனைவரும் இல்லம் திரும்புவதை உறுதி செய்வோம் என்றும் அமைச்சு அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளை அவர்களது மேலாளர்களுக்கு அல்லது மனிதவள அமைச்சுக்குத் தெரிவிக்கும்படியும் அமைச்சு அறிவுறுத்தியது.

